தாய் – மகன் பாசத்தை வெளிப்படுத்தும் வலிமை படத்தின் ‘மதர் சாங்’ 2 ஆவது பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஹூமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
வலிமை படத்தினை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளனர். இதனிடையே படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில், படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, அம்மா பாடல் (மதர் சாங்) இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலின் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார்.
’நான் பார்த்த முதல் முகம் நீ… நான் கேட்ட முதல் குரல் நீ’ என்ற இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ராம் திரைப்படத்திற்கு பின்னர் யுவன் இசையில் அருமையான அம்மா பாடல் என்றும், சித் ஸ்ரீராம் குரலில் அருமையான பாடல் என்றும் ரசிகர்கள் யூ டியூபில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், அம்மாவை புகழ்ந்து, மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil