ஏ.எல்.விஜய்யின் படங்களும் காப்பி சர்ச்சைகளும்

விஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியொரு காப்பி புகார் எழுவது வாடிக்கை. இதுவரை விஜய்யின் படங்கள் கடந்து வந்த காப்பி சர்ச்சைகளை சுவாரஸியமானவை.

பாபு

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் புதிய படம் தியா சென்ற வாரம் வெளியானது. அந்தப் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் சந்திரகுமார் என்பவர் புகார் கூறியுள்ளார். விஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியொரு காப்பி புகார் எழுவது வாடிக்கை. இதுவரை விஜய்யின் படங்கள் கடந்து வந்த காப்பி சர்ச்சைகளை சுவாரஸியமானவை.

1. கிரீடம்

ஏ.எல்.விஜய்யின் முதல் படம். மலையாளத்தில் வெளியான கிரீடம் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் அது பென்ச் மார்க் திரைப்படம். கல்ட் கிளாசிக். தமிழில் அட்டர் பிளாப்.

2. பொய் சொல்லப் போறோம்

விஜய்யின் இரண்டாவது படம். சுமாராகப் போனது. இதுவும் தழுவல்தான். இந்தியில் வெளியான கோஸ்லா கா கோஸ்லா படத்தை முறைப்படி தழுவி எடுக்கப்பட்டது.

3. மதராசப்பட்டணம்

விஜய்யின் ஒரே வெற்றிப்படம். ஆர்யா நடித்த இந்தப் படம் டைட்டானிக் உள்பட பல படங்களின் உல்டா. அஜயன்பாலா உள்பட பலர் இதன் திரைக்கதையில் பணிபுரிந்தனர்.

4. தெய்வத்திருமகள்

ஹாலிவுட் ஷான் பென்னின் ஐயம் சாம் படத்தின் திருட்டு தழுவல். இது பிரச்சனையாகி சம்பந்தப்பட்ட ஹாலிவுட் நிறுவனத்துக்கு பெரும் தொகை நஷ்டஈடாக அளிக்கப்பட்டது.

5. தாண்டவம்

விக்ரம் நடிப்பில் தோல்வியடைந்த மற்றெnரு படம். இது என்னுடைய கதை என உதவி இயக்குனர் ஒருவர் பிரச்சனையை கிளப்பினார். பெரும் சர்ச்சையானது. கடைசியில் திரைமறைவில் பிரச்சனை செட்டில் செய்யப்பட்டது.

6. தலைவா

கப்போலோவின் காட்ஃபாதர், அதனை தழுவி ராம் கோபால் வர்மா இயக்கிய சர்க்கார் என பல படங்களின் அவியல். படம் தோல்வி.

7. சைவம்

பலியிடுவதற்காக வளர்க்கும் சேவலை அந்த வீட்டின் சிறுமி காப்பாற்றும் கதை. இதற்கு யாரும், என்னுடைய கதை என்று புகார் சொல்லவில்லை. எனினும் எழுத்தாளர்கள் சுபா, இந்தியன் ராஜா உள்பட சிலர் இதே சாராம்சத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள்.

8. இது என்ன மாயம்

விக்ரம் பிரபு நடித்த படம். இந்தப் படத்துக்கு முன்பு வரை விக்ரம் பிரபு மினிமம் கியாரண்டி நடிகராக இருந்தார். இந்தப் படம் படுதோல்வி. அதிலிருந்து விக்ரம் பிரபு இன்னும் எழவில்லை. தென்கொரிய படமான சைரனோ ஏஜென்சியின் அப்பட்டமான காப்பி இந்தப் படம்.

9. தேவி

பிரபுதேவா, தமன்னா நடித்த படம். மதராசப்பட்டணத்துக்குப் பிறகு ஓரளவு கமர்ஷியலாக வெற்றியை தொட்ட படம். பல பேய் படங்களின் சாயல் இருந்தாலும், காப்பி என்று உறுதியாக சொல்லப்படாத ஒரே விஜய் படம்.

10. வனமகன்

டார்ஜான், ஜார்ஜ; ஆஃப் தி ஜங்கிள் உள்பட பல படங்களை பட்டி டிங்கரிங் செய்து எடுத்த படம். படுதோல்வி.

11. தியா

சாய் பல்லவி முதல்முறையாக நடித்திருக்கும் தமிழ்ப் படம். கருவில் அழிக்கப்படும் குழந்தை ஐந்து வருடங்கள் கழித்து ஐந்து வயது சிறுமிக்குரிய தோற்றத்துடன் தன்னை கருவில் அழித்தவர்களை பழிவாங்கும் பேய் கதை. இதே தான் என்னுடைய கதை, 2015 இல் எழுதினேன். பல நண்பர்களிடம் இந்த கதையை கூறினேன். அதில் ஏதாவது ஒரு நண்பர் மூலம் விஜய் என்னுடைய கதையை கேட்டிருக்கலாம் என சந்திரகுமார் கூறுகிறார். அதேநேரம், 1999 இல் வெளியான தி அன்பார்ன் திரைப்படத்துக்கும் தியாவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் அடுத்தப் படம் லட்சுமி தயாராக உள்ளது. நடனத்தை மையப்படுத்தி பிரபுதேவா நடித்திருக்கும் படம். ஹாலிவுட்டின் ஸ்டெப் அப் பட சீரிஸை விஜய் பார்த்திருப்பார் என இப்போதே கிண்டலாக எழுதுகிறார்கள்.

விஜய் இதுவரை எடுத்தப் படங்கள் அனைத்தும் முறையான, முறையற்ற தழுவல்கள். சைவம், தேவி விதிவிலக்கு. இத்தனைக்குப் பிறகும் முறைப்படி கதையை வாங்கி படமெடுக்காமல், குறுக்கு வழியிலேயே விஜய் சஞ்சரிப்பது ஏனோ?

×Close
×Close