பாபு
எத்தனையோ நடிகர்கள் இருக்கையில் அல்லு அர்ஜுன் மட்டும் ஏன் அதிரி புதிரி ஹீரோ? இதற்கான விளக்கம் சுவாரஸியமானது.
நேற்று அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் வெளியானது. இதனை, என் பேரு சூர்யா என் வீடு இந்தியா என்று தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தெலுங்கு ஒரிஜினல், தமிழ் டப்பிங் இரண்டும் ஒரே நாளில் வெளியாயின. அல்லு அர்ஜுன் படம் ஒன்று இப்படி வெளியாவது இதுவே முதல்முறை.
மகேஷ்பாபு, ஜுனியர் என்டிஆருடன் ஒப்பிடுகையில் அல்லு அர்ஜுன் தமிழர்களுக்கு அத்தனை பரிட்சயமான நடிகர் அல்ல. எனினும் அவரது புதிய படம் தமிழகத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 20 க்கும் அதிகமான திரையரங்குகள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கணிசமான திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. பிறமொழிப் படங்களுக்கு குறிப்பிட்ட திரையரங்குகளையே ஒதுக்க வேண்டும், தமிழ்ப் படங்களை ஆதிக்கம் செலுத்துகிற அளவுக்கு திரையரங்குகள் அளிப்பது சரியல்ல என்ற குரல் நேற்றிலிருந்து கேட்கத் தொடங்கியிருக்கிறது.
சென்ற மாதம் ராம் சரணின் ரங்கஸ்தலம் இதேபோல் அதிக திரையரங்குகளில் வெளியாகி ஓபனிங் வசூலாக சென்னையில் ஒரு கோடியைத்தாண்டி வசூலித்தது. மகேஷ்பாபுவின் பரத் அனே நேனு படமும் இதேபோல் வெளியாகி சென்னையில் நாச்சியார் படத்தைவிட அதிக ஓபனிங்கை பெற்று இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படங்கள் ஏற்படுத்தாத கிலியை அல்லு அர்ஜுனின் படம் எப்படி ஏற்படுத்தியது?
குழந்தை நட்சத்திரமாக கமலின் சுவாதி முக்தியம் (சிப்பிக்குள் முத்து) படத்தில் நடித்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் தனி ஹீரோவாக 2003 இல் கங்கோத்ரி படத்தில் அறிமுகமானார். படம் ஹிட். அடுத்து ஆரியா. அது பம்பர் ஹிட். அன்று அல்லு அர்ஜுன் ஸ்டைலிஷான ரொமான்டிக் ஹீரோவாகவே பார்க்கப்பட்டார். மூன்றாவது படமான Bunny இல் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தாலும் ரொமான்டிக் ஹீரோவாகவே அவர் அறியப்பட்டார். அவரது படங்கள் உடனுக்குடன் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடியன. மலையாள நடிகர்களுக்கு இணையான மார்க்கெட் அல்லு அர்ஜுனுக்கு கேரளத்தில் உள்ளது. வேறு எந்த தெலுங்கு நடிகர்களின் படமும் கேரளாவில் ஓடாத நிலையில் அல்லு அர்ஜுன் மட்டும் ஒரு ஸ்டாராக அங்கு நிலைபெற்றிருப்பது ஆச்சரியம். மலையாளிகளின் பண்டிகை தினங்களில் அல்லு அர்ஜுனின் மலையாள டப்பிங் படமொன்று கண்டிப்பாக சேனல்களில் ஒளிபரப்பாகும். அல்லு அர்ஜுன் படங்கள் விஜய்யின் படங்களைப் போல மலையாளிகளின் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒருபகுதி.
அல்லு அர்ஜுன் விஸ்வரூபம் எடுத்தது ஜுலாயி படத்தில். அதில் அவரது ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பின. ரேஸ் குர்ரம், சன் ஆஃப் சத்யமூர்த்தி படங்கள் அவரை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தின. ஆனால், அவரை ஆல் இந்தியா லெவலில் கொண்டுபோன படம், சரைனொடு. 2016 இல் வெளியான இந்தப் படம் ஆக்ஷன் படங்களில் ஒரு மைல் கல் எனலாம். அல்லு அர்ஜுனைப் பார்த்து பிறமொழி ஹீரோக்கள் அச்சம் கொள்வதற்கு காரணம் இவையல்ல.
தமிழ், தெலுங்குப் படங்களின் இந்தி உரிமை இப்போது பெரிய விலைக்கு வாங்கப்படுகிறது. முக்கியமாக கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங், டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளை மொத்தமாக வாங்குகிறது. இந்தப் படங்கள்தான் இந்தி சேனல்களில் பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அத்துடன் யூடியூபிலும் இந்தியில் டப் செய்து வெளியிடுகின்றனர். இது மாபெரும் சந்தையாக இப்போது வளர்ந்திருக்கிறது. இந்த சந்தையின் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன். அவரை நெருங்கக்கூட பிற ஹீரோக்களால் முடியவில்லை. அவரது இந்தி டப்பிங் படங்கள்தான் யூடியூபில் அதிகம் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக,
ஜுலாயி – 2.2 கோடி பேர்
ரேஸ் குர்ரம் – 3 கோடி பேர்
சன் ஆஃப் சத்தியமூர்த்தி – 6.9 கோடி பேர்
சரைனொடு – 16.30 கோடி பேர்
துவ்வடு ஜெகன்நாதம் – 14.30 கோடி பேர்
யூடியூபில் ஒரு பாடல் காட்சியை இரண்டு கோடி பேர் பார்த்ததை சாதனையாக நாம் பேசிக் கொண்டிருக்கையில், அல்லு அர்ஜுனின் ஒரு படத்தை அதே யூடியூபில் 16 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட படத்தை. இந்த எண்ணிக்கையே அல்லு அர்ஜுனை அதிரி புதிரி ஹீரோவாக மாற்றியிருக்கிறது. இவர் அளவுக்கு தெலுங்கின் பிற நடிகர்களின் இந்தி டப்பிங் படங்கள் பார்க்கப்படுவதில்லை. தமிழ் நடிகர்களில் விஜய் படங்கள் இப்போதுதான் ஒரு கோடி, இரண்டு கோடியை எட்டியிருக்கிறது. அஜித் படங்கள் பெரும்பாலும் லட்சங்களில். ஆனால், அல்லு அர்ஜுன் படங்கள் அனாயாசமாக பத்து கோடிக்கும் மேல் பார்வையாளர்களை சென்றடைகிறது. அவர்தான் இப்போது யூடியூபை தெறிக்கவிடுகிறார்.
மேலே நாம் பார்த்த நம்பமுடியாத பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் ரங்கஸ்தலமும், பரத் அனே நேனுவும் உருவாக்காத பதட்டத்தை தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்த காரணம். அல்லு அர்ஜுன் என்ற ஆக்ஷன் ஹீரோ நேரடி தமிழ்ப் படங்களின் வசூலை பாதிப்பார் என்ற அச்சம் நியாயமானது.
நேற்று வெளியான அவரது என் பேரு சூர்யா என் வீடு இந்தியா பிற படங்கள் அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் வருகின்றன. எனினும் இது தொடக்கம் மட்டுமே. அல்லு அர்ஜுனின் அடுத்தடுத்தப் படங்களை இதேபோல் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் இங்குள்ள ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அது கடும் போட்டியாக அமையும்.