ஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா?

Amala paul in aadai tamil movie: அமலாபாலின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கப்பட்டது என்று கூறுவதைவிட அவதூறு செய்யப்பட்டது என்றே கூறலாம்.

Amala paul in aadai tamil movie row: அமலாபால் நடிப்பில் தயாரான ஆடை திரைப்படம், அதிகம் பேசப்படும் பொருளாகியிருக்கிறது. இந்த படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த டீசர் வெளியானபோது ஏற்பட்ட சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து அமலாபால் மீது தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்ட விமர்சனங்களையும் அவதூறுகளையும் அவர் எதிர்கொண்ட விதம் அவரின் மன உறுதியை தைரியத்தை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

50 – 60 வயதானாலும் ஆண் நடிகர்கள் 25 வயது பெண் நடிகைகளுடன் டூயட் பாடி நடிக்கிற படங்களே ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் சினிமா துறை கடந்த 10 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அதற்கு, காரணம் தமிழ் சினிமாவில் நிலவிய தரமில்லாத வணிக சினிமாவின் மீது கோபம்கொண்ட இளம் இயக்குனர்களின் மாற்று திரைப்பட முயற்சிகளும் தலைமுறைகளின் காலமாற்றமும் காரணியாக செயல்பட்டன.


அந்த வகையில் இளம் இயக்குனர்களின் புதிய முயற்சியும் புதிய தலைமுறை நடிகைகளின் துணிச்சலும் சேர்ந்தபோது, கதாநாயக ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களான நயன்தாரா நடித்த அறம், கோலமாவு கோகிலா, ஜோதிகா நடித்த ராட்சசி ஆகியவை ஒரு பெரும் உடைப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த உடைப்பு என்பது வணிக ரீதியான வெற்றியை மட்டும் குறிப்பிடுவதாக இல்லாமல் திரைத்துறையில் கெட்டித் தட்டிப்போன ஆணாதிக்கத்தை முட்டை ஓடுகளை உடைப்பதைப் போல உடைத்துள்ளன.

இப்படி கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் வெற்றி பெற்றுவரும் நிலையில், அமலாபால் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் வெளியானபோது அது ஏன் சர்ச்சையானது? இந்த படத்தில் அவர் ஆடை இல்லாமல் நடித்தது மாபெரும் குற்றமா? கலாச்சார சீரழிவா? இந்த டீசரைத் தொடர்ந்து, அமலாபாலின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சனங்களும் அவதூறுகளும் வீசப்பட்டதன் நோக்கம் என்ன?

aadai tamil movie download, aadai movie story, aadai imdb, aadai tamil movie, ஆடை திரைப்படம்

உச்ச கட்டமாக ஆடை படத்தை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்படும் அளவுக்கு அந்த படம் மக்களுக்கு எதிரானதா? இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் ஆண்கள் யாரும் ஆடையில்லாமல் நடித்ததில்லையா? இப்படி பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆடை படத்துக்கும் அமலாபாலுக்கும் எதிரான விமர்சனங்களையும் அவதூறுகளையும் கவனிக்கும்போது தமிழகம் முற்போக்கு மாநிலம் என்பதெல்லாம் வெறும் வார்த்தையோ என்றே கருதவேண்டியுள்ளது.

உலக சினிமாக்களில், இந்திய சினிமாக்களில் பெண்கள் ஆடையில்லாமல் நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு அனைவருக்கும் தெரிந்த சில உதாரணங்களை கூறலாம். ‘300: ரைஸ் ஆஃப் அன் எம்பையர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை எவா கிரீன் தனது முதல் படமான ‘தி ட்ரீமர்ஸ்’ஸில் நிர்வாணமாக நடித்தார். இந்திய சினிமாவில் ஹெர்மன் ஹெசேவின் ‘சித்தார்த்தா’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட ‘சித்தார்த்தா’ படத்தில் நடித்த நடிகை சிமி கார்வால் நிர்வாணமாக நடித்துள்ளார், மலையாளத்தில் வெளியான ‘பாப்பிலியோ புத்தா’ படத்தில் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்கிற காட்சியில் சரிதா சுனில் நிர்வாணமாக நடித்துள்ளார். இப்போது, தமிழ் சினிமாவில் அமலாபால் ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானல் இது புதிதாக இருக்கலாம்.

ஒரு நடிகை ஆடை இல்லாமல் நடித்த படத்துக்கு கொந்தளிப்பவர்கள் ஆண் நடிகர்கள் ஆடை இல்லாமல் நடித்தபோது அதற்கு ஏதும் எதிர்வினை ஆற்றியதில்லை. அப்போது, தமிழ் சமூகத்தின் கலாசாரத்தில் ஆண்களுக்கு பங்கு இல்லையா? கலாசாரம் என்பது பெண்ணின் நிர்வாணத்தில் மறைந்திருக்கிறதா? என்று ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.

aadai tamil movie download, aadai movie story, aadai imdb, aadai tamil movie, ஆடை திரைப்படம்

‘அவன் இவன்’ படத்தில் ஜமீனாக நடித்த ஜி.எம்.குமார் நிர்வாணமாக நடித்துள்ளார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் அறுவை சிகிச்சை காட்சியின்போது மிஷ்கின் நிர்வாணமாக நடித்துள்ளார். ஒரு சினிமா கதைக்கு அவசியம் என்று கருதுகிற போது அது ஆண் நடிகனாக இருந்தாலும் பெண் நடிகையாக இருந்தாலும் ஆடையில்லாமல் நடிப்பதில் என்ன குற்றம் இருக்கிறது. ஒரு நடிகை ஆடை இல்லாமல் நடித்ததாலேயே தமிழ் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என்றால் அந்த அளவுக்கு பலவீனமானதா தமிழ் கலாச்சாரம் என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தனைக்கும் ஆடை படத்துக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால், இந்த படத்தை சிறுவர்கள் பார்க்க அனுமதி இல்லை. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம். ஆனாலும், இதுபோன்ற படங்களுக்கு கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் மூர்க்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஆடை படம் ஒரு கலாச்சார அதிர்வை ஏற்படுத்துகிற படமாகக்கூட இருக்கலாம். அதற்காக இதனை தடை செய்ய முடியுமா? பிறகு எப்படிதான் ஆணாதிக்க கலாச்சாரத்தை உடைப்பது?

அமலாபால் ஆடை படத்தில் நடித்ததற்காக அவர் மீது வீசப்பட்ட அவதூறு விமர்சனங்கள் அவ்வளவு எளிதானவை இல்லை. படத்தின் டீசர் வெளியான பிறகு, அமலாபால் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் அமலாபால் தன் மீது வீசப்பட்ட அவதூறுகளையும் ஒட்டுமொத்த சூழலையும் எதிர்கொண்ட விதமும் தைரியமும் துணிச்சலும் பாராட்டும் விதமாகவே இருந்தன.

இந்த படத்தில் நடித்ததற்காக அமலாபாலின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்கப்பட்டது என்று கூறுவதைவிட அவதூறு செய்யப்பட்டது என்றே கூறலாம். ஏனென்றால் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க முடியாது அவதூறு மட்டுமே செய்ய முடியும். அதற்கும், அவர் தைரியமாகவே பதில் அளித்தார். தனது திருமண முறிவுக்குப் பிறகு, தனது புதிய ஆண் நண்பரைப் பற்றியும் அவர் பரிந்துரை செய்ததால் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டுதான் படத்தில் நடித்ததாக கூறினார்.

அதே நேரத்தில், தனது முன்னாள் கணவர் பற்றியும் அவர் எந்த புகாரும் கூறவில்லை. இவ்வாறு மிகவும் தைரியமாக உறுதியாக அவற்றையெல்லாம் பக்குவமாக எதிர்கொண்டார். இந்த உறுதியுடன் அமலாபால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் மாறும் தமிழ் சினிமா வரலாற்றில் அவர் தனித்துவமான இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை: பாலாஜி

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close