பருத்தி வீரன் படத்தால் தனக்கு நஷ்டம் என அமீர் கூறியதற்கு, மறுப்புத் தெரிவித்து ஞானவேல் ராஜா அளித்திருந்த பேட்டி வைரலான நிலையில், இயக்குநர் அமீர் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தப் படம் பருத்தி வீரன். சூர்யாவின் உறவினரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தார். இந்நிலையில் பருத்தி வீரன் ரிலீஸாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும், அமீர் - ஞானவேல் ராஜா இடையேயான பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.
கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை கூப்பிடவில்லை என அமீர் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் உள்ளது. சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கள் நட்பை கெடுத்துவிட்டார் என்று அமீர் கூறினார். அமீரின் இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் அமீரின் குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுத்தார். ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் என்னை ஏமாற்றிவிட்டார். நந்தா படத்தில் இருந்து சூர்யா, அமீர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குனர் ஆனதும் ரொம்பவே மாறிவிட்டார்.
அமீர் என்னிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் போனதால், பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கி கொடுத்தார். அதேபோல், 2.75 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்து பருத்தி வீரன் படத்தை எடுத்தார். திரையில் வராமல் போன பன்றிகளுக்கு எல்லாம் கணக்கு காட்டினார். இப்படி பலவிதங்களில் என்னிடம் இருந்து பணம் சம்பாதித்த அமீர், தற்போது இவற்றை எல்லாம் பிரச்சினையாக மாற்றிவிட்டார்.
இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என நினைத்த சிவகுமார் சாரையும் பருத்திவீரன் பட வழக்கில் அமீர் சேர்த்துள்ளார். அமீர் என்னை ஏமாற்றியதைப் போல இன்னும் சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். இவ்வாறு ஞானவேல் ராஜா பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் அமீர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், “நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும் மீண்டும் உன் எதிரே திமிரோடு தான் நிற்பேன். உன்னைப் போல் நடிகர்களின் பின்னால் ஒளிய மாட்டேன்” என அமீர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.