கஜ புயலால் வாடி வதைந்திருக்கும் தமிழக மக்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டார். இதற்கு கமல் ஹாசன் நன்றி கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் கஜ புயல் தாக்கியது. இதனால் தமிழக டெல்டா மாவட்டங்களும் புதுச்சேரி மாநிலமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் புயலில் சாய்ந்தது.
அமிதாப் பச்சன் நிவாரண உதவி வீடியோ
இந்நிலையில் தற்போது இது குறித்து பாலிவுட் பிக் பி என அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சன் ஆதரவு வீடியோ ஒன்று வெளியிட்டுளார். அந்த வீடியோவில் "நவம்பர் 15-ம் தேதி கஜ புயல் தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. இதனால் மிகப்பெரும் விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் ஏறக்குறைய 3.7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள்.
60-80 சதவீத தென்னை மரங்கள் புயலுக்கு இரையாகியுள்ளன. இந்தியாவில் தேங்காய் உற்பத்திக்கான மிகப்பெரும் பங்கு அவர்களிடம் தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகள் அந்த மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், மற்ற மாநில மக்களும் கஜ புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். இந்த நேரத்தில் நம் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பது அவசியம்.
சென்னையை சேர்ந்த மாபெரும் நடிகர் கமல் ஹாசன், அவரது கட்சி மக்கள் நீதி மய்யம் புயல் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே மக்களே அனைவரும் ஒன்றுகூடி உதவுங்கள்" என தெரிவித்துள்ளார்.
December 2018
இந்த வீடியோவை, நேற்று பகிர்ந்த கமல் ஹாசன், தமிழகத்திற்கு ஆதரவு குரல் கொடுத்ததற்கு நன்றி என பதிவிட்டிருக்கிறார். இருப்பினும் இந்த வீடியோவை கமல் மட்டுமே பகிர்ந்ததற்கு காரணம் அந்த வீடியோவில் அவரது கட்சி பெயரையும், கட்சி தொண்டர்கள் ஆற்றும் களப் பணியை அமிதாப் குறித்ததாகவும் இருக்கலாம்.