Dadasaheb Phalke Award to Amitabh Bachchan: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை அறிவித்திருக்கிறார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘இரு தலைமுறையினரை மகிழ்ச்சிப் படுத்தியும், உத்வேகப்படுத்தியும் வருகிற ஜாம்பவான் அமிதாப் பச்சன், தாதாசாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக மொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்ச்சி அடைகிறது. எனது இதயபூர்வமான வாழ்த்துகள்’ என கூறியிருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர்.
அமிதாப் பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர். தற்போது அவர் பெற்றிருக்கும் தாதாசாகேப் பால்கே விருது, திரைத் துறையினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ஆகும்.
தாதாசாகேப் பால்கே விருது பெறும் அமிதாப்பச்சனுக்கு பிரபல பின்னணிப் பாடகி ஆஷாபோஸ்லே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “தாதா சாகேப் பால்கே விருது ஜூரி உறுப்பினராக என்ற முறையில் இந்த உயரிய விருதைப் பெறும் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “அன்புக்குரிய அமிதாப்பச்சனுக்கு வாழ்த்துகள். இந்த பாராட்டுதல்களுக்கும் மரியாதைக்கும் நீங்கள் மிகவும் தகுதியானவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருமகிழ்ச்சி மற்றும் மிகுந்த பெருமையாக இருப்பதாக அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனுடன் பத்லா மற்றும் பிங்க் படங்களில் நடித்த நடிகை டாப்ஸி பன்னு, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில் “நான் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றல், இந்திய சினிமாவில் சாத்தியமான எல்லா மரியாதைகளுக்கும் அவர் உண்மையிலேயே தகுதியானவர்" என்று கூறினார்.
பூத்நாத் மற்றும் பூத்நாத் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் அமிதாப் பச்சனை இயக்கிய நிதேஷ் திவாரி, “இது ஒரு அருமையான செய்தி. திரு பச்சன் பல தசாப்தங்களாக எங்கள் இதயங்களையும் பாக்ஸ் ஆபிஸையும் ஆளுகிறார். இப்போது இந்த விருது அதற்கு ஒரு உண்மையான சான்று. பல திட்டங்களில் அவருடன் நெருக்கமாக பணியாற்றிய அதிர்ஷ்டம் எனக்கு தனிப்பட்ட அளவிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.