ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண விழா மும்பையில் ஜூலை 12 அன்று கோலாகலமாக நடைபெற்றது. உலக திரை பிரபலங்கள், இந்திய நட்சத்திரங்கள் எனப் பலர் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என திருமண விழா களைகட்டியது.
இந்நிலையில் திருமண விழாவைத் தொடர்ந்து ஜூலை 13 அன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஷுப் ஆஷிர்வாத் விழா நடைபெற்றது. இதிலும், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அமிதாப் பச்சன் உடன் அவரது பேத்தி நவ்யா நவேலி நந்தா, மருமகன் நிகில் நந்தா உள்ளிட்ட குடும்பதினர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, மருமகன், பேரன் உடன் கலந்து கொண்டார். இந்நிலையில் விழாவில் 2 சூப்பர் ஸ்டார்கள் சந்தித்து பேசிய தருணம் தற்போது வைரலாகி வருகிறது.
அமிதாப் பச்சனை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்க முயன்றார். அப்போது அமிதாப் அவரை தொட்டு தடுத்து கட்டியணைத்து அன்பை பரிமாறினார். இருவரும் அதைத் தொடர்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்து பேசினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“