பாபு:
மலையாள நடிகர்கள் சங்கமான 'அசோஷியேசன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்டில்' (AMMA) நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து முன்னணி நடிகைகள் அதிரடியாக விலகியுள்ளனர்.
சென்றவருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்குள்ளானார். அந்த விவகாரத்தில் நடிகர் திலீபின் பெயர் அடிபட்டது. இரண்டுகட்ட விசாரணைக்குப் பிறகு ஜுலை 11, 2017 இல் திலீப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கேரளாவே இந்த சம்பவத்தால் கொதித்துப் போனது. திலீப் மீது கண்டனங்கள் மழையாக பொழிந்தன. மொத்த கேரளாவும் அவருக்கு எதிர்நிலையில் நின்றது.
நடிகர் திலீப் கைது செய்யப்படுவதற்கு முன் முகேஷ், சலீம் குமார், அஜு வர்க்கீஸ் போன்ற பல நடிகர்கள் திலீப் குற்றம் செய்திருக்க மாட்டார் என பேட்டிகள் தந்திருந்தனர். நடிகர் சங்கத்தில் பெரும்பாலானவர்கள் திலீபின் பக்கம் இருந்தனர். அவர் அப்படி செய்கிற ஆளில்லை என்ற நம்பிக்கையின் பேரில், அவருக்கு ஆதரவாக பேசினர்.
போலீஸ் திலீபை கைது செய்ததும் பொதுமக்களின், மீடியாக்களின் கோபம் திலீப் ஆதரவு நடிகர்கள் மீது பாய்ந்தது. சுருக்கமாகச் சொன்னால், மலையாள திரையுலகம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக, குற்றவாளி திலீபை காப்பாற்றியது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. அதனை பொய்யாக்க வேண்டிய நிர்ப்பந்தம் கேரள திரையுலகின் தலையில் சுமத்தப்பட்டது. அதன் காரணமாக நடிகர்கள் அவசரமாக கூடி, நடிகர் திலீபை நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில் மிகத்தீவிரமாக முன்னணியில் நின்றவர் நடிகை ரம்யா நம்பீஸன் ஆவார்.
ஒரு நடிகர் மீது குற்றம்சாட்டப்படும் போது, அவரிடம் உரிய விளக்கம் பெறாமல் சந்தேகத்தின் அடிப்படையில் சங்கத்திலிருந்து நீக்குவது விதிகளுக்கு எதிரானது. திலீப் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, சந்தேகத்தின் பேரில் கைதுதான் செய்யப்பட்டிருந்தார். மேலும், அவர் தரப்பு விளக்கம் எதுவும் நடிகர் சங்கத்தால் கேட்கப்படவில்லை. அன்றைய கொந்தளிப்பான நிலையில் இந்த விதிமீறல் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவர் உடனடியாக திலீபின் கூட்டாளியாக, பாலியல் வன்முறை குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருப்பார்.
இன்று நிலைமை மாறியுள்ளது. கைதுக்கு பின் வெளியான திலீபின் ராம்லீலா வெற்றி பெற்றது. ரசிகர்கள் அதனை ரசித்தனர், ஏற்றுக் கொண்டனர். சினிமா விழாக்களுக்கு, திருமண விழா போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு திலீப் வருகிறார், படங்களில் நடிக்கிறார். திலீபை நீக்கியது சங்க விதிமுறைகளை மீறிய செயல் என்று கடந்த ஞாயிறு கொச்சியில் நடந்த அம்மாவின் பொதுக்குழுவில் அவரை மீண்டும் அம்மாவின் உறுப்பினராகச் சேர்ப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. சித்திக் போன்ற நடிகர்களும், பல நடிகைகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதனடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திலீபை மீண்டும் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக சேர்த்துக் கொண்டதற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. திலீபை சேர்த்துக் கொண்டதன் மூலம் அம்மா என்று தங்கள் சங்கத்தை அழைக்கும் தகுதியை மலையாள நடிகர்கள் இழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பு கூறியுள்ளது. சென்ற வருடம் நடிகை பாலியல் வன்முறைக்கு உள்ளான பிறகு, சினிமாவில் உள்ள பெண்களுக்காக பிரத்யேகமான தொடங்கப்பட்டது விமன் இன் கலெக்டிவ் சினிமா என்ற அமைப்பு. ரீமா கல்லிங்கல் போன்ற முன்னணி நடிகைகள் இதில் உறுப்பினராக உள்ளனர். இந்த அமைப்பும் திலீபை சேர்த்துக் கொண்டதற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
திலீபின் உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் சில பிரதான கேள்விகளை முன்வைக்கிறார்கள். திலீபை சங்கத்திலிருந்து நீக்கும்போது இருந்த நிலைமையிலிருந்து இப்போது என்ன மாற்றம் வந்துவிட்டது? திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டாரா? விசாரணை நிலுவையில் இருக்கையில் இந்த உறுப்பினர் சேர்க்கை விசாரணையை திசைதிருப்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆனால், ஆதரிப்பவர்களின் பதில் வேறாக உள்ளது.
அம்மாவின் புதிய பொதுச்செயலாளர் இடவேள பாபு, திலீபை சங்கத்திலிருந்து நீக்கியதில் விதிமீறல் உள்ளது. அதனாலேயே அவர் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்கிறார். இதனை எதிர்த்து விமன் இன் கலெக்டிவ் சினிமா பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் வந்து கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லியிருக்கலாம். பேஸ்புக் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியாது என கறாராக பதிலளித்துள்ளார்.
திலீப் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட போது முன்னிலையில் நின்றவர் மம்முட்டி. மோகன்லாலை அப்போது பார்க்கவே முடியவில்லை. மோகன்லால் அம்மாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் திலீப் மறுபடியும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.திலீபை முன்வைத்து மலையாள சினிமா இரண்டாகப் பிரிந்து சொற்போரில் இறங்கியிருக்கிறது.
இந்நிலையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை மற்றும் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கள், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் அம்மா சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவியேற்று சில நாட்களே ஆகும் நிலையில், இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.