Bollywood Stars Says No To Anand L Rai : பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தற்போது மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. காரணம் அவர் இறுதியாக இயக்கிய ’ஜீரோ’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனது அடுத்த முயற்சியாக வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஆனந்த். ரொமாண்டிக் காமெடியில் தனுஷை மீண்டும் பாலிவுட்டுக்கு அழைத்திருக்கிறார். ஆம்! தனுஷின் முதல் இந்திப் படமான ‘ராஞ்சனா’வின் இயக்குநரும் ஆனந்த் எல் ராய் தான். புதிதாக அவர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார். இரண்டு நடிகர்களும் இந்தப் படத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Advertisment
இந்நிலையில், தான் இயக்கும் அடுத்த படத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் தேவை என நினைக்கிறாராம் ஆனந்த். ஆனால் அவர் யாரை அணுகினாலும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிகிறதாம். முதலில், அவர் ரித்திக் ரோஷனுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார், ஆனால் தனது ‘வார்’ படத்திற்குப் பிறகு, அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவே இருக்க விரும்பும் ரித்திக், ரோம்காம் படம் என்றதும் ‘நோ’ சொல்லி விட்டாராம்.
அதனால் அடுத்ததாக அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் இயக்குநர் ஆனந்த் எல் ராய். அவரும் இந்த படத்தில் ஆர்வம் காட்டவில்லை. அஜய்யும் ஆனந்தும் மற்றொரு படத்தில் விரைவில் இணைகிறார்கள். ஆனால் அது சாரா-தனுஷ் நடிக்கும் படம் அல்ல.
Advertisment
Advertisements
ரித்திக், அஜய் ஆகியோருக்குப் பிறகு மற்றொரு நடிகரும் ஆனந்தின் வாய்ப்பை மறுத்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரித்திக் மறுத்ததும், வருண் தவானிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் ஆனந்த். அவருடன் படம் செய்ய விரும்பும் வருணால் இந்த நேரத்தில் இணைய முடியவில்லையாம். காரணம், வருண் நடித்து வரும் ’கூலி நம்பர் 1’, ’எக்கிஸ்’, ’மிஸ்டர் லெலே’ ஆகிய படங்களால் தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம். எனவே அவரும் அதை விட்டுவிட வேண்டியிருந்ததாம்.