நடிகை ஆன்ட்ரியாவை ‘மிஸ்’ ஆன்ட்ரியா என அழைத்தால் நியாயம்! அதென்ன ‘மெஸ்’ ஆன்ட்ரியா? கோடம்பாக்கத்தில் ‘மெஸ்’ ஏதும் திறந்திருக்கிறாரா?
சித்தார்த் நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அவள்’. பேய்ப்படமான இதில், ஆன்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுல் குல்கர்னி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மிலிந்த் ராவ் – சித்தார்த் இருவரும் இணைந்து கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், இமயமலைப் பகுதிகளில் நடந்துள்ளது. பனி படர்ந்த இடத்தில் நிறைய காட்சிகளை ஷூட் செய்துள்ளனர். ஷூட்டிங் நாட்களில், அங்குள்ளவர்களுக்கு ஆன்ட்ரியா தான் எதையாவது ஊட்டிக்கொண்டே இருப்பாராம். இதனால், ‘மிஸ் ஆன்ட்ரியா’ என அவரை அழைத்தவர்கள், போகப்போக ‘மெஸ் ஆன்ட்ரியா’ என்று அழைக்கத் தொடங்கி விட்டார்களாம்.
இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டால், விழுந்து விழுந்து சிரிக்கிறார். “உங்களுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சி போச்சா? பொதுவா, நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை. அதுவும், கேக் மாதிரியான நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். ஸ்பாட்ல நான் மட்டும் தனியா சாப்பிட்டா நல்லா இருக்காதுல்ல? அதான் மத்தவங்களுக்கும் கொஞ்சம் ஊட்டிவிட்டுட்டு, நானும் சாப்பிடுவேன்” என ரகசியம் பகிர்கிறார் ஆன்ட்ரியா.
அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் போலவே ஸ்பாட்டில் நடந்து கொள்வாராம் ஆன்ட்ரியா. ‘கன்டினியூட்டி மிஸ் ஆகுது’, ‘இந்த ஷாட்டுக்கு இந்த காஸ்டியூம் இல்லையே…’, ‘இந்த ஸீன் இப்படி இருந்தா நல்லாருக்கும்’ என ஆன்ட்ரியா சொல்லச் சொல்ல… ஒட்டுமொத்த யூனிட்டே ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து வியந்திருக்கிறார்கள்.