லியோவில் பாடல் காப்பி... அனிருத் மீது குற்றச்சாட்டு; பாடலுக்கு யாரும் அனுமதி கேட்கவில்லை - பெலாரஷ்ய இசைக்கலைஞர் கருத்து
விஜய்யின் லியோ’ படத்தில், பெலாரஷ்ய இசைக் கலைஞர் ஓட்னிகாவின் பாடலைத் திருடி பயன்படுத்தப்பட்டிருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீது குற்றம் சாட்டப்படுள்ளது. மேலும், பெலாரஷ்ய இசைக் கலைஞர் இந்த பாடலைப் பயன்படுத்த தனது அனுமதியை யாரும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தற்போது தமிழில் மிகவும் அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய இசையமைப்பாளராக உள்ளார். ஷாருக்கானின் ஜவான் திடைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அனிருத் பான்-இந்தியா இசையமைப்பாளராக வலம் வருகிறார். லியோ படத்தின் மூலம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கொண்டாடப்படுகிறார். இருப்பினும், அவர் மீது இணையத்தில் உலாவரும் ஒரு பாடல் திருட்டு குற்றச்சாட்டு அவரது புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. லியோவின் ‘ஆர்டினரி பெர்சன்’ பெலாரஷ்ய இசைக்கலைஞர் ஒட்னிகாவின் ‘வேர் ஆர் யூ?’ (‘நீ எங்கே இருக்கிறாய்?’) பாடலைப் போலவே ஒலிப்பதைப் பலரும் கவனித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் பலரும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கருத்துப் பிரிவில், லியோ பாடலுக்கும் அவருடைய பாடலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்து ஒட்னிகாவுக்கு தெரிவித்துள்ளனர். இதற்கு அவரது பாடலை பயன்படுத்த யாரும் அனுமதி கேட்கவில்லை என்று ஓட்னிகா பதிலளித்துள்ளார்.
மேலும், பெலாரஷ்ய இசைக்கலைஞர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டார், இந்த பதிவு இந்த சிக்கலை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல தகவல்களைத் தருவதாகவும் அவர் கூறினார். “நண்பர்களே, ‘லியோ’ திரைப்படத்தைப் பற்றிய உங்கள் நூற்றுக்கணக்கான செய்திகளுக்கு நன்றி. என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. ஆனால், அனைவருக்கும் பதில் சொல்வது உடல் ரீதியாக இயலாது. மெயில் மெசேஜ்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ‘வேர் ஆர் யூ’ என்ற வீடியோவின் கீழ் ஆயிரக்கணக்கான கருத்துகளால் நிரம்பி வழிகிறது. நிலைமை மிகவும் தெளிவாக இல்லை... நாங்கள் இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம், சிறிது நேரம் கழித்து நான் நடக்கும் அனைத்தையும் மதிப்பாய்வு செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு பாடல்களையும் ஒப்பிடுவதற்காக இங்கே தருகிறோம்:
லியோ படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஐ ஆம் ஆர்டினரி பெர்சன்’ என்ற பாடலைக் கேளுங்கள்.
பெலாரஷ்ய இசையமைப்பாளர் ஓட்னிகா இசையமைத்த ‘வேர் ஆர் யூ’ என்ற பாடலைக் கேளுங்கள்.
பெலாரஷ்ய இசைக் கலைஞர் ஓட்னிகாவின் இந்தப் பாடலை காப்பியடித்ததாகக் கூறி பலர் ட்விட்டரில் அனிருத்தை டேக் செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இன்னும் பதிலளிக்கவில்லை.
இதே போல, இசையமைப்பாளர் அனிருத் 2018-ம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தில் இசையமைத்த அவரது 'கல்யாண வயசு' பாடல் சன்னனின் ‘டோன் லை’('பொய் சொல்லாதே') பாடலில் இருந்து திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், பீட்ஸ் பை மந்த்ராவிடம் இருந்து பீட்ஸின் உரிமையை வாங்கியதாக இசையமைப்பாளர் கூறினார்.
இருப்பினும், இப்போது பாடல் உரிமைக்காக தன்னை அணுகவில்லை என்று ஓட்னிக்கா கூறியதால், அனிருத் ஆர்டினரி பெர்சன் பாடலில் நடந்ததை தெளிவு படுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“