/indian-express-tamil/media/media_files/2025/08/12/tamil-actress-anitha-2025-08-12-20-39-35.jpg)
சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் படங்களைப் போல பளபளப்பாக இருந்தாலும், அந்த படங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிஜமான கதை முற்றிலும் வேறுபட்டது. நடிகை அனிதா ஹசன்நந்தானியின் வாழ்க்கை அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஒரு பழமைவாத சிந்தி நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடாஷா ஹசன்நந்தானி என்ற பெயரில் பிறந்த அனிதா, மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். தந்தையின் கடுமையாக கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அவர், ஜன்னலுக்கு அருகில் நிற்பதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒருவராக இருந்துள்ளார். அதேபோல், மேலைநாட்டு உடைகள் அணிவது கனவாகவே இருந்தது, மாலை 7 மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிவிட வேண்டும் என்ற கடுமையான விதி இருந்தது.
குடிப்பழக்கம் கொண்ட அவரது தந்தை, தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்ததால், அனிதாவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே நல்ல உறவு இல்லை. அவரது சகோதரி 20 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக மாறியதைக் கண்ட அனிதா, தானும் 19 அல்லது 20 வயதில் திருமணம் செய்து கொண்டு, ஒரு இல்லத்தரசியாகவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று எண்ணினார்.
அவரது 16 வயதில் அவரது தந்தையின் மறைவு, அவரது வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாற்றியது. குடும்பத்தைக் காப்பாற்ற, நடிகர் மனோஜ் குமாரின் அலுவலகத்தில் வரவேற்பாளராக வேலைக்குச் சேர்ந்த அனிதாவுக்கு, திரையுலகிற்குள் ஒரு புதிய கதவைத் திறந்தது. ஒருநாள், மனோஜ் குமாரின் மகன் அனிதாவைப் பார்த்து ஒரு போட்டோஷூட் செய்யுமாறு கேட்டார். அங்கிருந்துதான் அனிதாவின் நடிப்புப் பயணம் தொடங்கியது. இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை.
அனிதா ஆடிஷன்களில் பங்கேற்கத் தொடங்கினார், ஆனால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டார். இந்த சமயங்களில், அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது தாய் மட்டும்தான். அவருக்கு நடிப்புப் பயிற்சி எதுவும் இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆடிஷனிலும் தான் நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். அவரது முதல் பட வாய்ப்பு 1999ல் சுபாஷ் காய் இயக்கிய ‘தால்’ திரைப்படத்தில் கிடைத்தது. அதில் அவர் ஐஸ்வர்யா ராயின் தோழியாக ஒரு சிறிய வேடம்.
இது பற்றி பேசிய அனிதா, அது எப்படி வரும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சுபாஷ் கைஜி என்னிடம் கவலைப்பட வேண்டாம், நான் உதவி செய்கிறேன் என்று கூறினார். படப்பிடிப்புத் தளத்தில், அவர் சொன்ன, அறிவுறுத்தல்களை நான் பின்பற்றினேன். அப்படித்தான் எனது பயணம் தொடங்கியது" என்று ஒரு பேட்டியில் கூறினார். 'தால்' படத்திற்குப் பிறகு, அனிதாவுக்கு ஏக்தா கபூரின் தயாரிப்பில், 'கபி சவுதன் கபி சஹேலி' என்ற தொலைக்காட்சி தொடரில் முதல் முக்கிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த ஆடிஷனில், அனிதாவுக்கு ஒரு நீண்ட வசனம் கொடுக்கப்பட்டது. அதை அவரால் மனப்பாடம் செய்ய முடியவில்லை. இதனால் அவர் மிகவும் வருத்தப்பட்டு அழுது, அந்த ஆடிஷனில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால், ஏக்தா கபூரும், நிவேதிதா பாசுவும் அனிதா அந்த கதாபாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்துவார் என்று உறுதியாக நம்பினர். ஏக்தா கபூர் அனிதா வீட்டுக்கு நேரில் சென்று, மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து, மீண்டும் ஆடிஷன் செய்யுமாறு கூறினார்.
அதன்பின், அனிதா இந்திய தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். 'கவ்யாஞ்சலி', 'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி', 'யே ஹே மொஹபத்தே', 'நாகின் 3' போன்ற பல தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். அதே சமயம், அவர் திரைப்படங்களிலும் தனது தடத்தைப் பதித்தார். 'தால்' படத்திற்குப் பிறகு, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். ஆனால், தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் படுக்கைக்கு அழைக்கப்பட்டதால் மற்றும் உடல் தோற்றத்தின் அடிப்படையில் பாகுபாடுகளை எதிர்கொண்டதால், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தார்.
இந்தியில், 'குச் தோ ஹே', 'கிருஷ்ணா காட்டேஜ்', 'கோய் ஆப்ஸா' போன்ற படங்களில் நடித்தார். அனிதாவின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன. 'கோய் ஆப்ஸா' திரைப்படம் தோல்வியடைந்தபோது, அவர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தொழில் ரீதியான பின்னடைவுகள் ஒருபுறம் இருக்க, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொண்டார். 'கவ்யாஞ்சலி' தொடரில் நடித்தபோது, நடிகர் ஐஜாஸ் கானுடன் காதல் வயப்பட்டார். இவர்களது உறவு குறுகிய காலமே நீடித்தது. ஐஜாஸ் கான், அனிதாவை மாற்ற முயற்சித்தார். இதனால், அந்த உறவில் இருந்து வெளியேறினார்
அனிதா. அதிலிருந்து மீண்டு வர அவருக்கு ஒரு வருடத்திற்கும் மேலாகியது. தன் வாழ்நாள் முழுவதும் விடாமுயற்சியைக் கடைப்பிடித்த அனிதா, 2013-ல் ரோஹித் ரெட்டி என்பவரை மணந்தார். அவர்களுக்கு தற்போது ஆரவ் என்ற 4 வயது மகன் உள்ளார். மகன் பிறந்த பிறகு, அனிதா 5 வருடங்கள் ஓய்வில் இருந்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பியபோது புதிய சவால்களை எதிர்கொண்டார்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்புவது கடினம். நீங்கள் ஒரு தாயான பிறகு, நீங்கள் வேலை செய்ய மாட்டீர்கள், உங்கள் கவனம் குடும்பத்தில் இருக்கும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்" என்று அனிதா கூறினார். வயதும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பாதிக்கிறது. அதனால், வாய்ப்புகளைப் பெற, தனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளவும் அனிதா தயாராக இருக்கிறார். தற்போது, அவர் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் 'சோரியா சலி கயீ' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.
தமிழ் சினிமாவில், வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் அறிமுகமான அனிதா, அடுத்து சாமுராய் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு சுக்ரன், நாயகன் ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மகாராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.