புஷ்பவனம்- அனிதா குப்புசாமி தம்பதியினர் மிகவும் பிரபலமானவர்கள். கிராமிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றனர். ஏராளமான கிராமிய பாடல்களை பாடியுள்ளனர். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று கச்சேரி நடத்தி வருகிறார்கள்.
இருவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது காதல் மலந்து திருமணம் செய்து கொண்டனர். கிராமிய பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், பக்தி பாடல்கள் எனப் பல பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பல்லவி, மேகா உள்ளனர். இதில் பல்லவி சென்னையில் பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். அதில் மாடித் தோட்டம், சமையல் குறிப்புகள், பக்தி, பூஜை தொடர்பான செய்திகள் கூறி வீடியோ பதிவிடுவார். இந்நிலையில், புஷ்பவனம்- அனிதா குப்புசாமி தம்பதியினர் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தங்களின் வாழ்க்கைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
பல திரைப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் தனக்கு நடிப்பது பிடிக்காது என அனிதா குப்புசாமி கூறினார். தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், “எனக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன. மிஷ்கின் சார் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னிடம் கேட்டார். மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.
வைதேகி காத்திருந்தாள் படத்தில் இருந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தன. அந்த படம் மேட்டுப்பாளையத்தில் எடுக்கப்பட்டது. எங்கள் ஊரில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த படத்தில் நடிக்க ஆட்கள் தேடினார்கள். நான் அப்போது ரேவதி உயரம், அவரது சாயலில் இருப்பேன் என்று எல்லோரும் சொல்வார்கள். அந்த மாதிரி பெண் வேண்டும் என்று தேடினார்கள். அவர்கள் என் அப்பாவிடம் வந்து என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டார்கள். அப்பா விடவில்லை. நான் பரத நாட்டியமும் ஆடுவேன். அதனால் என் டீச்சரிமும் கேட்க சொன்னார்கள். நான் பட வாய்ப்பு வேண்டாம் எனக் கூறி மறுத்துவிட்டேன் என்றார்.
தொடர்ந்து, எனக்கு நடிக்க பிடிக்காது. ஆரம்பத்தில் திரைத்துறையில் பாட வேண்டும் என்று தான் வந்தேன். பின்னாளில் திரைத்துறையில் நடிக்கவும், பாடவும் பிடிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“