குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுப்பதோடு, பாலியல் வன்கொடுமைக்கு இந்த தண்டனை தான் கொடுக்கணும் என்று சித்தா பட நடிகை அஞ்சலி நாயர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஸ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி பேசும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தின் அண்ணியாகவும் படத்தின் நாயகியான சிறுமியின் தாயாகவும் நடித்தவர் அஞ்சலி நாயர். இந்த நிலையில் அஞ்சலி நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் அஞ்சலி நாயர், ”சித்தா படம் வெற்றி அடையும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், இந்த அளவிற்கு மக்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எந்த விஷயத்தை சமூகத்துக்கு சொல்ல நினைத்தோமோ அது சரியாக மக்கள் மத்தியில் சென்றுள்ளதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் கூட படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரம், குட் டச், பேட் டச் மட்டும் இல்லாமல் அம்மா- மகன் உறவு, அண்ணி- கொழுந்தனார் உறவு, நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் எப்படி இருக்க வேண்டும் என எல்லா உறவுகளுடைய முக்கியத்துவத்தையும் படத்தில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இதனால் இந்த படம் மக்களிடம் அதிக கனெக்ட் ஆகி இருக்கிறது.
த்ரிஷ்யம் 2 படத்தில் நான் போலீசாக நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரம் ரொம்பவே பேசப்பட்டது. சித்தார்த் சாரும் படத்தைப் பார்த்துவிட்டு போன் செய்து பாராட்டி இருந்தார். பின் சித்தா படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையோட அம்மாவாக நீங்கதான் நடிக்கணும். நீங்கள் செய்தால் தான் இந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்று சொன்னவுடன் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நானும் சமூக அக்கறை உள்ள படம் என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்.
அதேநேரம், இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கன்சீவ் ஆகிவிட்டேன். எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அதற்கு பிறகு இதை பற்றி நான் சித்தார்த் சாரிடமும் இயக்குனரிடமும் சொன்னேன். ஆனால், சித்தார்த் சார் தான் வாழ்த்துக்கள் சொல்லி, நீங்கதான் நடிக்கணும், நல்லா பண்ணுவீங்க என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். நான் ஏழாம் மாதம் வரை படத்தில் நான் நடித்துக் கொடுத்தேன். சித்தார்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்கவே முடியாது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
மேலும், படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பாராட்டி இருந்தார்கள். அதேபோல் கேரளாவில் நிறைய போக்ஸோ கேஸ் பதிவாகி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை பாலியல் குற்றவாளிகள். நடுரோட்டில் நிற்க வைத்து தண்டனை கொடுக்கனும். அப்போதான் இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது என்று ஒவ்வொரு ஆண்களுக்கும் பயம் வரும். குற்றங்களும் குறையும்.
போலீஸ் பாலியல் குற்றவாளிகளை கைது பண்ணி ஜெயிலில் போட்டு மூன்று வேளை சாப்பாடு போட்டு, எல்லா வசதிகளும் செய்து கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியில் வந்து மீண்டும் தப்பு செய்வார்கள். அதனால் பாலியல் கொடூரன்களை ரோட்டில் நிக்க வைத்து கொல்வது தான் சரியான தண்டனை. அந்த மாதிரியான கொடூரன்கள் வாழ்ந்து என்ன பண்ண போறாங்க? குட் டச், என்ன டச் பற்றி பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, ஆண் குழந்தைகளுக்கும் சின்ன வயதிலிருந்தே சொல்லித் தரணும்,” இவ்வாறு அஞ்சலி நாயர் பேட்டி அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.