நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பொதுவாகவே தலைவர் படம் என்றால் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் இந்த முறை அதற்கும் மேல் சென்று ரத்தத்தால் அபிஷேகம் செய்துள்ளனர். பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்த ஃபர்ஸ்ட் லுக் பேனருக்கு முன்பு தாரை தப்பட்டையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ஆட்டு கிடாவை துடிதுடிக்க வெட்டி பலி கொடுத்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த ஆட்டை பேனரின் மீது தூக்கி காட்டி ஆட்டு ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் கன்னட நடிகர் சுதீப் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் எருமை மாட்டை வெட்டி அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அண்ணாத்த பட போஸ்ட்ருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்து வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களின் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.
ரஜினி ரசிகர்களின் செயலுக்கு பால்முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என ரஜினிகாந்த்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil