திட்டமிட்டப்படி தீபாவளிக்கு சர்கார் ரிலீசாகுமா? என்ற சந்தேகம் இப்போது வலுவாக எழுந்திருக்கிறது. காரணம், பாக்யராஜின் அறிக்கையும், முருகதாஸின் குற்றச்சாட்டும்.
'சர்கார்' படத்தின் கதையும், தனது 'செங்கோல்' கதையும் ஒன்றாக இருப்பதாக உதவி இயக்குனர் வருண் என்பவர், எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், "சர்கார், மற்றும் செங்கோல் கதை இரண்டுமே ஒன்று தான். பெரும்பாலான இசி மெம்பர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். முருகதாஸிடம் சமரசமாக போகச் சொல்லிக் கேட்டோம். ஆனால், அவர் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறோம் என கூறிவிட்டார். இதனால், வருண் நீதிமன்றம் செல்ல எழுத்தாளர்கள் சங்கம் தடையாக இருக்காது" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்த ஐகோர்ட்டில் வருண் வழக்கு தொடர, எழுத்தாளர் சங்கம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே அறிக்கை மூலம் பதிலளித்த பாக்யராஜ், "சர்கார் படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான். செங்கோல் கதை சர்கார் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
ஆனால், பாக்யராஜின் இந்த புகாரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "முதலில் எனது Bounded Script-ஐ (முழு ஸ்க்ரிப்ட்) பாக்யராஜ் படிக்கவேயில்லை. வருணின் முழு ஸ்க்ரிப்ட்டை படித்த பாக்யராஜ், என்னுடைய மேலோட்டமான ஸ்க்ரிப்ட்டை படித்துவிட்டு, இரண்டு கதையும் ஒன்று என அறிவித்திருக்கிறார். இது நியாயமே இல்லை. எனது முழு ஸ்கிரிப்ட்டையும் படித்தார் என்று பாக்யராஜை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர் படிக்கவேயில்லை.
மொத்தம் 15 இசி மெம்பர்கள் இதனை விசாரித்தார்கள். அதில் 5 மெம்பர்கள் மட்டுமே இரண்டும் ஒரே ஸ்க்ரிப்ட் என்று சொல்லி இருக்கிறர்கள். ஏழு பேர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 2 மெம்பர்கள் கருத்து சொல்லவில்லை. அப்படியிருக்க, மெஜாரிட்டி மெம்பர்களின் ஒத்த கருத்துடன் இந்த முடிவை எடுத்தேன் என பாக்யராஜ் எதன் அடிப்படையில் சொல்கிறார்?
இரண்டு ஸ்க்ரிப்ட்டிலும் உள்ள ஒற்றுமை, ஹீரோவின் ஓட்டை வேறொருவர் போட்டுவிடுவார் என்பதே. அதை வைத்துக் கொண்டு இரண்டும் ஒரே கதை என பாக்யராஜ் எப்படிச் சொல்கிறார்?
இரண்டு முதலமைச்சர்களின் மறைவு, தமிழக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற சூழல், இரண்டு பெரும் நடிகர்களின் அரசியல் என்ட்ரி என்று நடப்பு அரசியல் விவகாரங்களை படத்தில் பேசியிருக்கிறோம். அது 17 வருடங்களுக்கு முன்பு எழுதிய கதையில் எப்படி வரும்?
பாக்யராஜின் 'சின்ன வீடு' படமும், மணிவண்ணனின் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படமும் ஒரே கதைக்களம் கொண்ட படம் தான். இதில், கோபுரங்கள் சாய்வதில்லை படம் தான் முதலில் வந்தது. அவர் மட்டும், ஒரே கதையை எடுத்துக் கொண்டு வேறொரு திரைக்கதையுடன் படம் அமைக்கலாமா? இது என்ன நியாயம்?
வருனுக்கும், பாக்யராஜுக்கும் 15 வருட நட்பு இருக்கிறது. எனவே, என் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவது போன்று தோன்றுகிறது.
என் படம் என்பதனால், பிரச்சனை வருவதாக நான் நினைக்கவில்லை. விஜய்யோடு இணைந்து நான் எப்போதெல்லாம் படம் பண்ணுகிறேனோ, அப்போதெல்லாம் பிரச்சனை வருகிறது.
என் மீது குற்றம் சுமத்திய பாக்யராஜும், அந்த ஐந்து இசி மெம்பர்களும் எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று காட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி அளித்துள்ளார்.