இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி என்றால், சென்னை ஒய்எம்சிஏ மைதானம் அமைந்துள்ள, நந்தனம் பகுதியில் மட்டும் இசை மழை பொழியும். ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் தான் அந்த மழையில் நனைவார்கள். அப்பகுதியின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் தான் நனைவார்கள். அந்தளவுக்கு டிராஃபிக் ஜாம் ஏற்படும்.
கடந்த சனிக்கிழமை(ஆக.10) அப்படிப்பட்ட இசை கச்சேரி ஒன்றை நடத்தி அதிர வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
"சென்னை... தமிழா!" என்ற பெயரில் ரஹ்மானின் இசைக் கச்சேரி, சனிக்கிழமை மாலை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கிய ரஹ்மான், இரண்டாவதாக அழகிய தமிழ் மகன் படத்தில் வரும் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' பாடலை பாடினார்.
இடையிடையே பார்வையாளர்களிடம் பேசிய ரஹ்மான், "சென்னையில் இசைக் கச்சேரி நடத்தினால் எனக்கு தனி அமைதி கிடைக்கும். உங்கள் முகங்களை பார்த்துவிட்டால், எனது அத்தனை இன்னல்களையும் மறந்துவிடுவேன்" என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1583-300x217.jpg)
தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடலை ரஹ்மான இசைத்த போது, அந்த இடமே அதிர்ந்தது.
பழைய பாடல்களான வீரபாண்டி கோட்டையிலே, ஊர்வசி ஊர்வசி மற்றும் ஹம்மா ஹம்மா பாடல்களை பார்வையாளர்கள் விரும்பிக் கேட்க, குறையின்றி வாசித்தார் ரஹ்மான். நட்பின் இலக்கணத்தை போற்றும் முஸ்தஃபா முஸ்தஃபா பாடலை ரஹ்மான பாடிய போது, பார்வையாளர்கள் மொபைல் டார்ச்சை ஃபிளாஷ் செய்து அவர்களும் சேர்ந்து பாடினர். தவிர, தனது பழைய மற்றும் புதிய பாடல்களை மிக்ஸ் செய்தும் ரஹ்மான் பாடினார்.
ஜோனிதா காந்தி, ஷ்வேதா மோகன், சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஆண்ட்ரியா, ஹரிச்சரண் மற்றும் ஏ.ஆர்.அமீன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பாடினர். ராப் புகழ் ஷிவ், ஏடிகே மற்றும் ராஜகுமாரி ஆகியோரும் பாடல்கள் பாடினர். 'சன்ஷைன்' எனும் புதிய ஆர்கெஸ்ட்ராவை அறிமுகம் செய்த ரஹ்மான், 'இவர்களது பெர்ஃபாமன்ஸ் ஸ்பெஷலானது' என்றார். அந்த ட்ரூப்பில் இடம்பெற்றிருந்த இளம் இசைக் கலைஞர்கள் மெர்சல் படத்தின் பாடலை இசையமைத்தனர்.
அதேபோல், இளம் பியானோ இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மேடையில் வாசித்தார். பார்வையாளர்கள் மத்தியில் அவரது வாசிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.