Advertisment

'மலிவான அரசியல் வேண்டாம்; பழசை மறக்காதீங்க': ஏ.ஆர் ரகுமான் மகள்கள் ஆதங்கம்

மலிவான அரசியல் வேண்டாம்; பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்; கடந்த காலங்களில் செய்தவற்றை மறக்காதீர்கள் – ரஹ்மான் மகள்கள் ஆதங்கம்

author-image
WebDesk
New Update
AR Rahman with family

மலிவான அரசியல் வேண்டாம்; பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்; கடந்த காலங்களில் செய்தவற்றை மறக்காதீர்கள் – ரஹ்மான் மகள்கள் ஆதங்கம்

சென்னையில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் தெரிவித்தாலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்தநிலையில், ரஹ்மான் மகள்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை, சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகத்தால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகள் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்பட்டதால், அரங்கில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல பெண்கள் கூட்ட நெரிசலால் தாங்கள் அனுபவித்த துன்புறுத்தல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஏ.சி.டி.சி நிறுவனம் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தது. ஏ.ஆர் ரஹ்மான் தன் பங்கிற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்தார்.

இதுதொடர்பாக ரஹ்மான் தனது X தளத்தில், "அன்புள்ள சென்னை மக்களே, துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் டிக்கெட் வாங்கிய உங்களில் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து நீங்கள் வாங்கிய டிக்கெட்டின் நகலை arr4chennai@btos.in இல் உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும். @ BToSproductions @actcevents," என்று ட்வீட் செய்தார்.

மேலும் மற்றொரு பதிவில், “என்னை சிலர் G.O.A.T (எக்காலத்திலும் சிறந்தவர்) என்று அழைக்கின்றனர். எனவே நமது விழிப்புணர்வுக்காக இந்த முறை நானே பலிகிடா ஆகிறேன். சென்னையின் கலை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, திறன்மிகு கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பார்வையாளர்களின் விதிகளைப் பின்பற்றச் செம்மைப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல் ஆகியவற்றுடன் செழிக்கட்டும். சென்னையில் ஒரு கலாசார மறுமலர்ச்சியைத் தூண்டி, நமக்கு மிக அவசியமான, உள்ளூர் மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்டாடுவோம். இறைவன் நாடினால் நடக்கும்என்று ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். ரஹ்மான் தாமதமாக பதிலளித்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் திங்களன்று, ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் கதீஜா மற்றும் ரஹீமா, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு முன்பு எப்படி நிறையச் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய பதிவைப் பகிர்ந்துள்ளனர். மேலும், விமர்சனங்களை 'மலிவான அரசியல்' என்று குறிப்பிட்டு, இசை கச்சேரியில் ஏற்பட்ட 'துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு' 'அமைப்பாளர்கள் தரப்பை' அவர்கள் குற்றம் சாட்டினர்.

ரஹ்மான் இதற்கு முன்பு 2016, 2018, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இசை கச்சேரிகளை நடத்தியது, கோவிட் பாதித்த குடும்பங்கள் மற்றும் பிறருக்கு எப்படி உதவினார் என்பதையும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். விமர்சகர்கள் பேசுவதற்கு முன் சிந்திக்கவேண்டும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், குஷ்பூ, பார்த்திபன் திரைப்பிரபலங்கள் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

நடிகர் கார்த்தியும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக, “ரஹ்மான் சாரை நாங்கள் 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம்... கச்சேரியின் போது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், அவர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று தெரியும். குழப்பங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தினரும் இசைக் கச்சேரியில் இருந்தனர். ரஹ்மான் சார் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால் வெறுப்பை விட அன்பை தேர்வு செய்யுமாறு அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன். #LoveAboveHate," என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

A R Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment