இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்துள்ளது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு சாய்ரா பானு குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவிக்கு ஆதரவாக பேசிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் இசையமைப்பாரளாக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களுக்கு இசைமைத்துள்ள நிலையில், வெளிநாட்டு படங்களுக்கு இசையமைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற தமிழர் என்ற சிறப்பியும் பெற்றுள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கத்திஜா, அமீன் உட்பட 3 பிள்ளைகள் உள்ள நிலையில், நேற்று (நவம்பர் 19) சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு 29 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு, விகடன் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, நடிகை கஸ்தூரி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு, சாய்ரா பானுவின் தமிழில் சரளமாக இல்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். சாய்ராவுக்கு ஏன் தமிழ் சரளமாக தெரியவில்லை, அவரது தாய்மொழி என்ன, அவர்கள் வீட்டில் என்ன மொழி பேசினார்கள் என்று தனது எக்ஸ் தளத்தில் கஸ்தூரி கேட்டிருந்தார். இதற்கு கஸ்தூரி தேவையில்லாமல் ரஹ்மான் குடும்பத்தை விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதே சமயம் கஸ்தூரியின் கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், தமிழில் “காதலுக்கு மரியதை” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரது கண்ணியமான பதில் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். தற்போது ஒரு வருடம் கழித்து, ரஹ்மானும் சாய்ராவும் தங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, தம்பதியரின் முடிவைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு வருகிறது." தம்பதியினர் இன்னும் ஒருவருக்கொருவர் அபரிமிதமான அன்பைக் கொண்டுள்ளனர், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியது குறிப்பிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“