/indian-express-tamil/media/media_files/2025/09/14/screenshot-2025-09-14-191514-2025-09-14-19-15-35.jpg)
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட வீடியோவில், "இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா. எளிமையும், இமாலயத்தை போன்ற சாதனையும் ஒருங்கிணைந்த ஒரு மகத்தான நபர் அவர். சாஸ்திரிய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் மக்களிசை ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை தனது இசையூடாக இணைத்த மேதை" என பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், "குறிப்பாக திரையிசையைக் கடந்து மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் சாதனை செய்ய ஊக்கமளிக்கக்கூடியதாக இருக்கும். அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞர் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பேருவகை கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜாவின் பொன்விழாவை தமிழாடு அரசே ஒருங்கமைத்து கொண்டாடுவதில் இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரமாகவும் பார்க்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமன்றி, தமிழ்நாட்டுக்கே தனிப்பெருமையை தேடித்தந்தவர் இசைஞானி; அவரைப்பார்த்த வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு” - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்#ARRahmanOnIlaiyaraaja#IsaignaniPride#TamilMusicLegacy#IlaiyaraajaTribute… pic.twitter.com/09h9zLz8mL
— PttvOnlinenews (@PttvNewsX) September 14, 2025
சிம்பொனி இசையமைப்பில் சாதனை படைத்து, திரைப்பட இசையமைப்பில் 50 ஆண்டுகளை கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு அங்கீகாரமாக, "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் நேற்று சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இந்த விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், "உலகில் இதுவரை தோன்றிய இசை மேதைகளுக்கு இதுபோன்ற பாராட்டு வழங்கப்படவில்லை. இது முதல் முறையாக நடக்கிறது. முதன்முறையாக முதல்வர் ஸ்டாலினிடம் நான் சிம்பொனிக்கு செல்லப்போகிறேன் என்று சொன்னதும், அவர் உடனே என்னை வாழ்த்தினார். எனக்கு இசைஞானி பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி என் மேல் வைத்த அதே அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார். அதற்கு இசைதான் காரணம் என நினைக்கிறேன்.
கிராமத்தில் இருந்து வந்தவன், அதனால் கிராமத்துச் சாயல் இருக்கக் கூடாது. ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்பதால் அந்த இசைச் சாயலும் வந்துவிடக் கூடாது. அந்தப் படங்களின் பின்னணி இசைச் சாயலும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டுக்காரன் என்பதால் தமிழ்நாட்டுச் சாயலும் வந்துவிட்டது. இந்தியன் என்பதால் இந்தியச் சாயலும் வந்துவிடக் கூடாது.
உலகில் பல கலைஞர்களின் இசை கேட்டுள்ளேன். அவர்கள் சாயலும் வந்துவிடக் கூடாது. அவர்கள் சாயல் பயன்படுத்தி விட்டேன் என்று கூறிவிடக் கூடாது. இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி 35 நாளில் சிம்பொனி உருவாக்கினேன். என் கற்பனையில் தோன்றிய இசையை 87 பேருக்கு எழுதியதுதான் அவர்கள் வாசித்தார்கள். 35 நாட்களில் சிம்பொனி இசையை வடித்தேன். எண்ணத்தில் தோன்றியதை ஒலி வடிவில் வடித்தேன். ஏராளமான சுய கட்டுப்பாடுகளுடன் சிம்பொனி இசையை உருவாக்கினேன்.
இளையராஜா 35 நாளில் முழு சிம்பொனியை உருவாக்கியதற்கான சிரமம் மற்றும் கட்டுப்பாடுகளை பகிர்ந்துள்ளார். 87 இசைக்கருவிகளுக்கான இசையை கற்பனையின் அடிப்படையில் வடித்தார். இந்த கலைத்துறையில் வெற்றி பெற அவரது குழந்தைகளுக்காக நேரம் செலவழிக்கவில்லை எனவும், அவர்களுக்கு முதலில் நன்றி கூற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட இளையராஜா, "நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும், அமைச்சர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.