ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு 10% கேளிக்கை வரி செலுத்தாத ஏ.சி.டிசி நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ் அளித்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி செப்டம்பர் 10-ம் தேடி சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏ.சி.டி.சி ஈவண்ட்ஸ் ஏற்பாடு செய்தது. இந்த நிறுவனம், இசை நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்ததால், நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பல்வேறு குளறுபடிகள் இருந்தன.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த குளறுபடிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை ஏ.சி.டி.சி நிறுவனத்திற்கு தெரிவித்தனர்.
இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஏ.சி.டி.சி ஈவண்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை நடத்திய ஏ.சி.டி.சி நிறுவனம் 20 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டுமே காவல் துறையிடம் அனுமதி பெற்றது. ஆனால், இதற்கு மாறாக இந்த நிகழ்சியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதால் போக்குவரத்து நெரிசலும் குளறுபடியும் நடைபெற்றதாகக் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10% கேளிக்கை வரியை செலுத்தாததால் ஏ.சி.டி.சி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏ.சி.டி.சி நிறுவனம் டிக்கெட் விற்பனையில் 10% கேளிக்கை வரி செலுத்த வேண்டும். இந்த கேளிக்கை வரியை செலுத்தாததால், சென்னை, அண்ணா நகரில் உள்ள ஏ.சி.டி.சி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று வியாழக்கிழமை (செப்டம்பர் 14) நோட்டீஸ் அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“