ஆஸ்கர் விருது பெற்று உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாரின் கரீமா பேகம் மறைவுக்கு, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இந்திய திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று உலக அளவில் ஒரு இந்திய இசையமைப்பாளராக புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலை அவருடைய இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அன்புத்தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழில் தொடங்கி பல மொழிகளிலும் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரஹ்மானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். தாயின் இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆறுதல்” என்று பதிவிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் கவிஞர் குட்டி ரேவதி, ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்லோர் மீதும் தாயன்பைப் பொழியும் ஆற்றலும் ஆளுமையும் இதயமும் கொண்ட கரீமா பேகம் அவர்கள், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின்...
Posted by Kutti Revathi on Monday, 28 December 2020
கவிஞர் குட்டி ரேவதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “எல்லோர் மீதும் தாயன்பைப் பொழியும் ஆற்றலும் ஆளுமையும் இதயமும் கொண்ட கரீமா பேகம் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் தாயார் எங்களை எல்லாம் விட்டு மறைந்தார். அவரைப் போல் இன்னொருவரைக் கண்டதில்லை! இசைத்தமிழ் வணக்கங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"