தாராகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அறம் செய்.
இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜீவா, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா, குணா, இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் மற்றும் படத்தில் நடித்த நடிகர்,நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய திருச்சி சாதனா, “எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரமாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தை துணிந்து மிக தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள். நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்கு தயக்கமாக இருந்தது.
எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்கு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
யூடியூபில் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான சாதனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது பற்றி பேசிய வீடியோ வெளியானதில் இருந்து, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சாதனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைத்த ‘அறம் செய்’ படக்குழுவினருக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதில் ஒரு நெட்டிசன், ’தமிழக திரைத்துறை எந்த அளவுக்கு கேவலமான நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
ரவுடிபேபி சூர்யா, காத்துக்கருப்பு கலை, சிக்கா, திவ்யா கள்ளச்சி, இலக்கியா, ஜி.பி.முத்து இவர்களையும் காந்தி, காமராஜர், இந்திரா காந்தி பாத்திரத்தில் நடிக்க வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் சினிமா தரங்கெட்டு போனதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என சினிமா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“