விஜய் டி.வி-யின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. தனது தனித்துவமான காமெடியை வெளிப்படுத்தி ஆண் போட்டியாளர்களுக்கு சமமாக போட்டியிட்டு வென்ற இவர், இந்த நிகழ்ச்சிப் பிறகு டி.வி சீரியல், மேடை கலை நிகழ்ச்சிகள், பிக்பாஸ், திரைப்படங்கள் என கலக்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியாகிய ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் அறந்தாங்கி நிஷா.
ஜெயிலர் படத்தில் ரஜினி மகன் அசிஸ்டன்ட் கமிஷனராக வருவார். அவர் விசாரித்து வரும் வழக்கில் இன்ஸ்பெக்டராக அறந்தாங்கி நிஷா நடித்திருக்கிறார். தந்தை முத்துவேல் பாண்டியனுடன் (ரஜினி) அவருக்கு இரண்டு காட்சிகள் உண்டு. முதலாவது, அவரது மகன் ரொம்பவே நேர்மை இருக்கிறார் என்றும், அப்படி இருந்தால் வேலையில் தொடர்வது கஷ்டம், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்.
இரண்டாவதாக, சிலை கடத்தல் கூட்டத்தை துரத்தி புலன் விசாரணை செய்து வரும் ரஜினியின் மகன் அர்ஜுன் (வசந்த் ரவி) ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுவார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை முடிக்க போலீஸ் மேலிடம் கூற, அவர் சிலை கடத்தல் கூட்டத்தால் தான் கொல்லப்பட்டு இருக்கலாம் என அறந்தாங்கி நிஷா (கனக லட்சுமி) ரஜினியிடம் கூறுவார். இதேபோல் படத்தில் முதன் முதலாக ரஜினியின் மகன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிற செய்தியையும் அறந்தாங்கி நிஷா தான் வெளிப்படுத்தி இருப்பார். அவர் மூலம் தான் படம் பார்க்கும் நமக்கும் தந்தை ரஜினிக்கும் சொல்லப்பட்டு இருக்கும்.
இந்நிலையில், நடிகர் ரஜினியுடன் தான் இந்த காட்சிகளில் நடித்தது குறித்து மிகவும் நெகிழ்ந்துள்ளார் அறந்தாங்கி நிஷா. இதுகுறித்து அவர் பேசுகையில், 'நான் ரஜினி சாரை பார்த்ததுமே டயலாக்கை மறந்து விட்டேன். அதன்பிறகு கொஞ்ச நேரத்திலேயே அதனை நன்றாக உள்வாங்கிவிட்டு கடகடவென சொல்லி முடித்தேன். எனது டயலாக் முடிந்ததே ரஜினி சார் என்னைய 'ஹக்' பண்ணதுக்கு அப்பறம் தான் தெரிந்தது. "சூப்பராக பண்ணுடாட' என்றார்". ஒருவேள இந்த டயலாக்கை நான் பண்ணிருந்தா 12 டேக் எடுத்திருப்பேன். நீங்க சிங்கிள் டேக்ல எடுத்துட்டீங்க என்றார். அந்த அளவிற்கு எளிமையாக இருந்தார். அவருக்கு சுத்தி போடணும்.
ஒருநாள் டப்பிங்கில கரைக்ஸன் இருக்குனு வர சொன்னங்க. ஊர்ல இருந்து ஃபிளைட் புடிச்சு வந்தேன். அப்ப ரஜினி சார் ஸ்டூடியோ-ல இருந்தாங்க. இரண்டு, மூணு கரைக்ஸன் இருக்குனு சொன்னங்க. அதல ஒன்னு, 'ஏ.சி போயிட்டாரு சார்' டயலாக். அத நான் சொல்லுறதுக்குள்ள நெல்சன் சாரே அங்கிருந்து போயிட்டாரு. இருந்தாலும், டயலாக்குல அந்த எமோஷன் வர வரைக்கும் நான் பேசினேன். அந்த டயலாக் சொல்ல ஒரு 30 - 35 டேக் வர போயிருச்சு. ஷூட்ல நல்லா சொல்லிருந்தேன். ஆனா டப்பிங்கில அது வரல. எனக்காக ரஜினி சார் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல வெயிட் பண்ணி முடிச்சுட்டு தான் போனாரு. மிகவும் பெரிய மனுஷன் அவரு." என்று கூறி அறந்தாங்கி நிஷா நெகிழ்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.