Archana Chandhoke Tamil News: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் அர்ச்சனா. இவர் பணிபுரியாத தொலைக்காட்சிகளே இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அர்ச்சனா, கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார். தொடக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் அன்பு அன்னையாக மாறியிருந்த இவர், கொஞ்ச நாட்களிலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தவிர இவர் நிஷாவுடன் சேர்ந்து ஆடிய “அன்பு தான் ஜெயிக்கும்” கேம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது. இதனால் அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் மீம்கள் மற்றும் ட்ரோல்கள் பறந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனா, தனது மகள் ஸாராவுடன் இணைந்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். இவற்றில் சில நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க, வழக்கம் போல் ட்ரோல் செய்து வைரலாக்க தொடங்கினர். அதிலும் குறிப்பாக ‘பாத்ரூம் டூர்’ வீடியோ படுபயங்கரமாய் கலாய்க்கப்பட்டது.

தற்போது அர்ச்சனா, ஒரு பிக்பாஸ் பிரபலமாய் தமிழகமெங்கும் அறியப்படும் நிலையில், அவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் மகள் ஸாராவுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பொருத்தமான ரோல் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் நெல்சனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில், அர்ச்சனாவுக்கு திடீரென மூளையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கலகலவென பேசும் அர்ச்சனாவுக்கு ஏன் இப்படியொரு நிலைமை? என அவரது ரசிகர்கள் துடித்துப்போயினர். மேலும், அவர் விரைவிலே பூரண குணம் பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். அவரும் கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.

தற்போது, அர்ச்சனா விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை எப்போதும் போல் எனர்ஜியாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வருகிறார். மேலும், தங்கை அனிதா மற்றும் மகள் ஸாராவுடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோக்களை அன்றாட தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
இந்நிலையில், அர்ச்சனா தனது மகளுடன், விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எந்த மாதிரியான நிகழ்ச்சி மற்றும் ஒளிபரப்பாகும் தேதி குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

விஜய் டிவியின் தொகுப்பாளினி ஜாக்குலின், அர்ச்சனா மற்றும் மகள் ஸாரா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“