சின்ன மச்சான் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர். இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள். தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர்.
பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவருமே போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் செந்தில் வெற்றியாளராக உருவெடுத்தார். அவருக்கு ரூ.50 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ராஜலட்சுமிக்கு ‘மக்களின் குரல்’ என்ற சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் போட்டியின்போது இவர்கள் இருவரும் ஜோடியாக பாடிய, சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலமானது. நடிகர் பிரபுதேவாவுக்கும், இந்த பாடல் பிடித்துவிட, தனது சார்லி சாப்ளின் படத்தில் இருவரையும் இந்த பாடலை பாடவைத்தார். அதிலிருந்து செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் வெள்ளித்திரையில் சினிமா பாடகர்களாக அறிமுகமாகினர்.
சின்ன மச்சான் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பயங்கர ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, இருவரும் தமிழ் சினிமாவின் பிரபல பின்னனி பாடகர்களாக உருவெடுத்தனர்.
இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தில் வெளியான ’சாமி சாமி’ பாடல் ராஜலட்சுமிக்கு நல்ல புகழைத் தேடித்தந்துள்ளது.
இதுகுறித்து ராஜலட்சுமி கூறுகையில், தெலுங்கில் ஏய் சாமி பாடலை கேட்கும்போது, அந்த பாடலில் ஒரு வேகம் இருந்தது. அதற்கு இணையாக தமிழ்ப்பாடல் இருக்க வேண்டும் என நினைத்து பாடினேன். ஆனால் இந்தளவுக்கு பாடல் ஹிட்டாகும் என நினைக்கவில்லை.
என் அம்மா எப்போதும் திரையங்குக்குச் சென்று படம் பார்க்கும் ஆர்வம் இல்லாதவர், ஆனால் ’சாமி சாமி’ பாடலைக் கேட்ட பிறகு ‘புஷ்பா’ படம் பார்க்க திரையரங்குக்கு அழைத்துப் போகச் சொன்னது என் வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணம் என்று கூறினார்.
இதனிடையே விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில்’ தமன் இசையில், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும், ஒரு பாடலை பதிவு செய்ததாக தகவல்கள் பரவின.
இது உண்மையா என அறிந்து கொள்ள நிறைய ஊடகங்கள் தம்பதியரை அணுகின.
அப்போது செந்தில் அளித்த பேட்டியில், ’நானும், என் மனைவியும் தளபதி 66 படத்தில் பாடலை பாடியிருப்பதாக வெளியான செய்திக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது வெறும் வதந்தி தான். எனினும் அஜித் படத்தில் பாடிவிட்டதால் விஜய் படத்திலும் பாட ஆவலுடன் காத்திருப்பதாக இருவரும் கூறினர்.
எனினும் செந்தில்கணேஷ், விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் இரண்டு நட்சத்திர ஹீரோக்களுக்கு பாடியுள்ளார். ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு வெளியிடாததால், இப்போது தன்னால் எதுவும் கூறமுடியாது என்று கூறிவிட்டார்.
இதற்கு முன் செந்தில் திருடு போகாத மனசு, கரிமுகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இதயத்தை திருடாதே சீரியலில் கேமியோ தோற்றத்தில் நடித்ததன் மூலம், தம்பதி இருவரும் சின்னத்திரையிலும் அறிமுகமாகினர்.
செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்த ஜோடி பின்னர் பின்னணி பாடல் மற்றும் கச்சேரிகளில் பிஸியாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”