பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெரம்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைபிரபலங்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கானா பாலா, பிக்பாஸ் இசைவாணி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று இசைவாணி அவரது குழுவுடன் இணைந்து ஆம்ஸ்டாங்கிற்கு கண்ணீர் மல்க இசை அஞ்சலி செலுத்தினார். இது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.
அப்போது இசைவாணி, எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே என்ற பாடலை பாடினார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவுகளை நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இசைவாணியும் பாட முடியாமல் தேம்பி அழுதார். அவரை உடன் இருந்தவர்கள் தேற்றி பாட வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய இசைவாணி, அண்ணன் நிறைய பேரை படிக்க வைத்துள்ளார். அடிதட்டு மக்களில் நிறைய பேருக்கு உதவிகளை செய்துள்ளார். சுமார் 800 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் தான் செய்த உதவியை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அன்பு கட்டளை போடுவார். அவருடைய பெரிய கனவே வீடு கட்டணும் என்பதுதான். ஆனால் அந்த இடத்தில் அவரை இப்படி செய்துவிட்டார்கள். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார், ஊக்கமளிப்பார். அவரது இழப்பு எங்களுக்கு பெரிய இழப்பு எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“