நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தைப் கவனித்து வந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், கடந்த 21-ஆம் தேதி தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் பலரும் அன்புச் செழியன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். சசிகுமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறை அன்புச் செழியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறது.
ஒருபக்கம் விஷால், 'ஸ்டூடியோ கிரீன்' ஞானவேல்ராஜா, சுசீந்திரன், சமுத்திரக்கனி, அமீர், நடிகை பூர்ணா,ஆகியோர் அன்புச் செழியனுக்கு எதிராக நிற்க, மறுபக்கம் இயக்குனர் பாலா, சீனு ராமசாமி, விஜய் ஆண்டனி, தேவயானி, இயக்குனர் வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை வெளியிட்டனர். இதனால், சாமானிய மக்களே குழம்பிப் போயுள்ளனர்.
இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஆஜர் ஆவதாக கூறிய சசிகுமார், நேற்று மாலை 5.40 மணிக்கு திடீரென வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
அவரிடம் துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. சசிகுமாரிடம் சுமார் 2 மணி நேரம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
விசாரணைக்கு பின்னர், சசிகுமார் நிருபர்களிடம் பேசுகையில், "அசோக்குமார் எனது அத்தை மகன். அவனது இறப்பில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. நான் இந்த அளவு வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் அவன். அசோக்குமார் தற்கொலை குறித்து போலீசார் கேட்டார்கள். எனக்கு தெரிந்தவற்றை கூறி உள்ளேன். அன்புசெழியன் நல்லவர் என்று சில திரைத்துறையினர் கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து. அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை. அன்புசெழியன் மீது மேலும் பல புகார்கள் வரும்" என்று சசிகுமார் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.