நாவல் கொரோனா வைரஸ் பரவல் வருவதற்கு முன்பே தல அஜித் நடித்த மங்காத்தா படத்திலேயே படக் குழுவினர் மாஸ்க் அணிந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோன வைரஸ் உலகையே அச்சுறுத்தி முடக்கி வைத்திருக்கிறது. தற்போதுதான் சில நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 1-ம் தேதி பேருந்துகள் இயங்கியது. இருப்பினும், தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் 5,900க்கு மேல் தொற்று பதிவாகி வருகிறது.
இந்த சூழலில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் 2011ம் ஆண்டு நடித்த மங்காத்தா படத்தில் அவருடன் நடித்த அஸ்வின் ககுமனு மங்காத்தா படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் அமைந்த முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. வாலி படத்திற்குப் பிறகு, அஜித் மங்காத்தா படத்தில் நடித்த நெகட்டிவ் ஹீரோ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மங்காத்தா படம் 2011ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அஜித் உடன், நடிகர்கள் அர்ஜூன், அஸ்வின் ககுமனு, பிரேம், மகத், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது. இந்த படம் அதன் விருவிருப்பான சுவாரசியமான திரைக்கதை இயக்கத்தாலும் தல அஜித்தின் ஸ்டார் வேல்யூவாலும் பெரும் வெற்றி பெற்றது.
மங்காத்தா படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த படத்தில் அஜித்துடன் நடித்த அஸ்வின் ககுமனு, மங்காத்தா படத்தில் நடித்திருந்தார். அவர் மங்காத்தா படத்தின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில், மங்காத்தா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் அஜித்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு காட்சியை விவரிக்கிறார். அப்போது அருகே நின்று இருக்கும் அஸ்வின் ககுமனு மாஸ்க் அணிந்துகொண்டு நிற்கிறார். இந்த புகைப்படம் குறித்து அஸ்வின் ககுமனு, “படத்தின் ஒரு காட்சியில், ரயிலில் ஏ.சி.பி பிருத்வியுடன், விநாயக் மகாதேவ் தொலைபேசியில் உரையாடுவது போன்று எடுக்கப்பட்ட ஒத்திகை போட்டோவே இது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் 2020 இல் இருந்து அந்த காட்சிக்கு டைம் ட்ராவல் செய்தது போன்று உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அஸ்வின் ககுமனு வெளியிட்ட இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ப்ரோ மாஸ்க் அணிந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வை மங்காத்தா படப்பிடிப்பின்போதே தொடங்கிவிட்டீர்களா என்று கேட்டுளார். ரசிகர்கள் சிலர், இந்த புகைப்படம், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு நடந்த அஜித் படத்தின் படப்பிடிப்பு மாதிரி உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"