அசுரன், புதுப்பேட்டை, காலா உள்ளிட்ட பங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா பாதிப்பால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. நடிகர் நிதீஷ் வீரா மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிரபலங்கள் முதல் சாமானியன் வரை பலரும் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலையில் பிரபலங்கள் கே.வி.ஆனந்த், பாண்டு, மாறன், ஆகியோர் கொரோனா தொற்றால் இறந்தனர். கொரோனா பாதிப்பு உயிரிழப்புகள் இல்லாமல், திடீர் மாரடைப்பால் நடிகர் விவேக், நெல்லை சிவா ஆகியோர் உயிரிழதனர். தமிழ் சினிமா உலகில் நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் என அடுத்தடுத்து நடந்த மரணங்களால் திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலை கபடிகுழு, காலா ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் நிதீஷ் வீரா மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் நிதீஷ் வீரா அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். அவருடைய மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதீஷ் வீரா பற்றி நினைவுகூர்ந்து பேசிய அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகர் நிதீஷ் வீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அவரை நினைவுகூர்ந்தும் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “நண்பர் நித்திஷ் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று நேத்து சாயங்காலம் எனக்கு தகவல் சொன்னாங்க… சரி எப்படி இருக்கார்னு சொல்லி விசாரிச்சு கேட்டுக்கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு நாளில் முன்னேற்றம் இருக்கும்னு டாக்டர் சைட்ல சொன்னாங்க… இன்னைக்கு காலைல 6 மணிக்கு அவர் இறந்துட்டார்னு செய்தி வந்துச்சு. அவரை வந்து எனக்கு புதுப்பேட்டை படத்தில் இருந்தே தெரியும். அப்ப நான் உதவி இயக்குனரா இருந்தேன். நான் தனுஷ் மூலமா ஒரு படம் பண்ணப் போறதா தெரிஞ்சுகிட்டு என்னை சந்திக்க வருவாரு. அப்போதிலிருந்து எங்களுக்கு பழக்கம் இருந்தது. ஒரு நடிகரா அவருக்கு நிறைய மேடு பள்ளங்கள் இருந்துகொண்டே இருந்தது. நாங்க 2 பேரும் சேர்ந்து அசுரன் படத்திலதான் வொர்க் பண்ணோம். அதற்குப் பிறகு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வருகிறது என்று சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையை திரும்ப தொடங்குவதாக சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்துக்கு பெரிய இழப்பு. அவருடைய நெருங்கிய நண்பர்களுகும் என்னைப் போல அவரைத் தெரிந்தவர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு.
பலரும் இந்த கொரோனாலாம் இல்லை. ஏமாற்று வேலை. சும்மா, இதன் நோக்கம் இதுதான் என பலவிதமாக சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் இந்த வருடம் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூட நமக்கு பிடித்தவர்களை, நெருக்கமானவர்களை கொரோனா தாக்குகிறது.
நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. முடிந்தவரை மாஸ்க் அணிவதை கடைபிடித்தால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறார்கள். ஜப்பானில், கொரோனா வைரஸை வைத்து டெஸ்ட் செய்யும்போது மாஸ்க் அணிந்தால் 70 % தொற்றை தடுக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள். மாஸ்கை மூக்குக்கு கீழே இருக்குமாறு என்றெல்லாம் இல்லாமல், சரியாக போட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை கொரோனா பாஸிட்டிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மிகவும் நம்பும் மருத்துவர்களுடன் ஆலோசிக்கலாம். டாக்டர்கள் ஆக்ஸிஜன் அளவு 95% – 94% என குறைவதை ஆக்ஸி மீட்டர் மூலம் அறிந்தால் கூட எச்சரிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு உறுதுணையாக அமையும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி வலியுறுத்துகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று வருகிறது. நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.
எனக்கு வராது, நான் தினமும் ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்கிறேன், பாதிக்காது என்றெல்லாம் சொல்ல கூடாதென நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும் இளைஞர்கள் உடல் வலிமையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். ஆக இளைஞர்களுக்கு பொறுப்பு இருப்பதாக பாருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம்.! பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள்” என உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“