அசுரன் வெற்றி விழா; வெற்றிமாறனை நடிக்கச் சொன்னேன் – தனுஷ் பேச்சு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

By: Updated: January 15, 2020, 12:27:20 AM

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ், ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

நடிகர் தனுஷ்

நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது, “இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இது நன்றி சொல்கின்ற மேடை.. தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது.வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்து நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.

வெற்றிமாறனை நடிக்கச் சொன்னேன் – தனுஷ்

அது ஒரு கனாக்காலம் படம் சூட்டிங்ல ஒரு காட்சி அம்மா இறந்துவிட்டதாக கனவு கண்டு தூக்கத்தில் இருந்து அலறி எழுந்து நடிக்கணும். அப்போது நான் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறனை பண்ணச் சொல்லுங்க. அதைப்பார்த்து நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே வெற்றி கையில் இருந்த பேடைப் போட்டுவிட்டு, என்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன்பிறகு நடித்தேன். பிறகு, நான் அமைதியாக இருப்பதைப் பார்த்த பாலுமகேந்திரா என்னிடம் வந்து, நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் ஒன்றுமில்லை என்று கூறினேன். அவர் என்ன சொல்லு என்று மீண்டும் கேட்டபோது, அந்த காட்சியில் நான் நடித்தது நன்றாக இருந்ததா? இல்லை வெற்றிமாறன் நடித்தது நன்றாக இருந்ததா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடைய இரண்டு பிள்ளைகளில் யார் சிறந்தவர் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? அதை என்னால் சொல்ல முடியாது என்று கூறினார். பாலுமகேந்திராவால் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட நானும் வெற்றியும் அன்றில் இருந்து இன்றுவரை சகோதரராக இருந்து வருகிறோம்.

அசுரன் திரைபடத்தின் 100வது நாள் கொண்டாட்டம்

சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப் படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை. எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல. கஷ்டமா இருந்தது. அப்பதான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார். ஆனால், நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க. அப்ப தான் நான் சொன்னேன். வெற்றி என் பக்கத்திலேயேதான் தான் இருக்கும்மான்னு என்று நான் வெற்றிமாறனைச் சொன்னேன். .இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும். நமக்கு எல்லாம் நல்லதாகவே முடியும்.” என்று கூறினார்.

தனுஷ் எல்லாப்படத்தில் இருந்தும் இந்தப்படத்தில் ஒருபடி மேல் – வெற்றிமாறன்

நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியதாவது, “படம் தயாராகி வெளி வருவதற்குள் நிறைய மிஸ் அண்டெர்ஸ்டேண்டி இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள் பெரும் காரணம். எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மேல் காட்டுவேன். அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையை தான் உங்களிடம் கோபமாகக் காட்டுவேன் என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லிக் கொள்கிறேன். தனுஷ் எல்லாப்படத்தில் இருந்தும் இந்தப்படத்தில் ஒருபடி மேல் தான். இந்தப்படத்திற்கு அவர் கொடுத்த கமிட்மெண்ட் ரொம்ப அதிகம். எமோஷ்னலா ஒரு விசயத்தை கேரி பண்றதுலாம் ரொம்ப பெருசு. இந்த கதாபாத்திரத்தை அவர் பண்ணியதால் தான் இவ்வளவு சிறப்பா வந்திருக்கிறது . தாணு சார் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கூலாக மெயிண்டெண்ட் செய்தார். பிரகாஷ்ராஜ் சார் சொன்ன நேரத்தில் சரியாக வருவார். கேமராமேன் வேல்ராஜ் நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுத்துக் கொடுப்பார். ஜிவி கொடுத்த எனர்ஜி கமர்சியல் சக்ஸஸுக்கு முக்கியக் காரணம்” என்றார்.

எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன் – தாணு

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது,  “மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறன் அவர்களோடு படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம். எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன். தன் படத்தில் வெற்றிமாறன் உழைத்த ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக்காட்டும் போதெல்லாம் இது பெரிய வெற்றி அடையும் என்று நம்பினேன் . ரிலீஸ் தேதி அறிவித்ததும் வெற்றிமாறன் பதட்டம் ஆனார். என் கண்கள் பனிக்கும் நன்றியை வெற்றிமாறனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் திலகத்துக்குப் பிறகு தனுஷ்தான் – தாணு புகழாரம்

எனக்கும் தனுஷுக்குமான தொடர்பை வலுப்படுத்தியது தம்பி அன்புச்செழியன். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்பிக்க வைக்கிறது. கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில் தனுஷை தவிர யாராலும் இப்படத்தில் நடிக்க முடியாது என்றார்கள். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ் தான். ரஜினியிடம் நான் இந்தப்புள்ள நமக்கு கிடைத்த பொக்கிசம் என்றேன். அவரும் தனுஷ் கால்களில் விழும் சீனில் நானே நடிக்கலாமா என்று நினைத்தேன் என்றார்” என்று தாணு பேசினார்.

அன்புச்செழியன் பேசியதாவது, “அசுரன் படம் தொடங்கிய காலத்தில் இருந்தே படத்தைத் தெரியும். தாணு அண்ணன் பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர். நான்கு தலைமுறையாக அவர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த வெற்றி. அவரின் நாணயம் மிகவும் பெரிது. சினிமாவில் வஞ்சகம் துரோகம் உண்டு. அப்படி இருந்த போதும் அண்ணன் நிலைத்து நிற்கிறார். இந்தப்படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு பிரஷர் கொடுத்தார் அண்ணன். வெற்றிமாறன் இந்தப்படத்தை இசையோடு கொண்டு வந்து காட்டினார். ஜி.வி.யின் இசை வெற்றியின் உழைப்பு எல்லாம் தான் இப்படி ஒரு வெற்றி. தனுஷ் பிறவி நடிகர். இந்தப்படம் அவரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டு. படத்தின் ரிலிஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். வெற்றி அடையும் என்று நினைத்தேன். ஆனால், இப்படியொரு வெற்றி அடையும் என்று நினைக்கவில்லை. தனுஷ் நம் நாட்டின் அடையாளம்” என்றார்.

அபிராமி ராமநாதன் பேசியதாவது,  “1985-ல யார்னு ஒரு படம் எடுத்தார் தாணு. படம் ஓடும்போது தியேட்டர்க்குள் வந்தார். அந்தப்படத்தில் ஒருத்தருக்கு சாமி வருவதற்கு தாணுவே ஏற்பாடு செய்திருந்தார். அதுவே தாணுவின் விளம்பரத்திற்கு எடுத்துக்காட்டு. தனுஷ் தவிர வேறு எந்த நடிகராலும் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. வெற்றிமாறன் தனுஷ் ஆகியோரிடம் இருக்கும் பணிவு அவர்களை உயர்த்திக் கொண்டே தான் இருக்கும். இந்தப்படத்தில் வெற்றிமாறன், தனுஷ், ஜி.வி. ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும். அதற்கான முயற்சிகளை தாணு எடுக்க வேண்டும்” என்றார்.

கென் கருணாஸ் பேசியதாவது, “முதல் நன்றி வெற்றி சாருக்கு. அவரால் தான் நான் இங்கே இருக்கேன். தாணு சார் என்னை மிகவும் உற்சாகப் படுத்துவார். தனுஷ் சார் கூட அதிக சீன் இருப்பதால் பயமா இருந்தது. அவர் தான் எனக்கு ப்ரீ டைம் கொடுத்து என்கிரேஜ் பண்ணார். என்னை ப்ரண்ட்லியாக பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பெரிய நன்றி” என்றார்.

அசுரன் மிக முக்கியமான படம் – இயக்குனர் பாலாஜி சக்திவேல் பாராட்டு

பாலாஜி சக்திவேல் பேசியதாவது, “இந்த நூறாவது நாள் விழா சும்மா பேசுவதில்லை. தியேட்டர் அதிபர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நடத்துவது தான் சிறப்பு. அதற்கு களம் அமைத்துத் தந்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு நன்றி. இந்த அசுரன் படம் மிக முக்கியமான படம். தமிழ்சினிமாவின் போக்கில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதற்கான உழைப்பு என்பது வெற்றிமாறன் தனுஷிடம் ஜெனியூனாக இருந்தது..ரைட் சென்ஸில் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். சில படம் விமர்சனம் ரீதியாக நல்ல பெயர் எடுக்கும். வசூல் இருக்காது. சில படம் வசூல் குவிக்கும் ஆனால் நல்ல விமர்சனம் இருக்காது. ஆனால் அசுரனில் இரண்டுமே நடந்தது. என்னை நடிக்க வைத்தது வெற்றிமாறன் தான். எனக்கு நடிப்பே வராது என்றிருந்தேன். வெற்றிமாறனுக்குப் பெரிய நன்றி. இந்த வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “தாணு சாருக்கு வாழ்த்துகள். அவரின் கேரியரில் இது மிகப்பெரிய வெற்றிப்படம். எந்தப்படம் வணிக ரீதிதாகவும், விமர்சன ரிதீயாகவும் வெற்றிப்பெறுகிறதோ அது காலத்தால் மறக்க முடியாததாக இருக்கும். அசுரன் அப்படியான படம். சென்ற வருடத்தின் ஆகச்சிறந்த நடிகர் தனுஷ் தான். அதில் சந்தேகமே இல்லை. வெற்றிமாறன் தான் சென்ற ஆண்டின் சிறந்த இயக்குநர். இப்படி மிகச்சிறந்த விசயங்களை கொண்டுள்ள படம் அசுரன். இந்தப்படத்தின் வெற்றி படத்தின் டீசரில் உள்ள வசனத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. இந்தப்படத்தோடு வேறு சில படங்களும் வெளியானது. ஆனாலும், அசுரன் படத்திற்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஒரு தயாரிப்பாளர் வெற்றி அடையணும் என்று வெற்றிமாறன் அதிகம் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.” என்றார்.

இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது, “அசுரன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்ததும் பயத்தோடு தான் சென்றேன். தனுஷுடன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் நடிப்புக்கு எப்ப ரெடியாவார் என்றே தெரியாது. வெற்றிமாறனின் வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு அவ்வளவு தெரியும். இந்த வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்கு ஸ்பாட்லே தெரியும். இந்த வெற்றியில் என்னையும் ஒரு பங்காகச் சேர்த்துக்கொண்ட தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன் தனுஷ் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

நிகழ்ச்சியில் ரோஹினி பன்னீர் செல்வம் பேசியதாவது, “இந்த விழாவில் பேசுவது இன்பம். இப்படியான சிறந்த படங்களைக் கொடுப்பதில் கலைப்புலி எஸ் தாணு தான் முதன்மையானவர். உண்மையாக 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியைக் கொடுத்த படம் அசுரன் மட்டும் தான். தம்பி தனுஷ் மீது உள்ள மரியாதை மிகவும் கூடிவிட்டது. இந்தப்படத்தை தமிழ்நாட்டில் யாருமே பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். எங்கள் தியேட்டரில் மிகவும் சந்தோஷமாக நாங்கள் ஓட்டிய படம் இது” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Asuran movie success celebration actor dhanush director vetrimaaran speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X