Asuran Review In Tamil: நாவலைத் தழுவி எடுக்கப்படுகிற படங்கள், அதே சுவாரசியத்தை கொடுக்க முடியாது என்கிற கருத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அசுரன், ரசிகர்களை வெகுவாக திருப்தி படுத்தியிருக்கிறது.
தனுஷ்- வெற்றிமாறன் இயக்கத்தில் 4-வது படம் இது. (சலிக்காது மக்கா! இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் சேர்ந்து பண்ணுங்க!). அதேபோல பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் 3-வது படம் தனுஷுக்கு! இரு குடும்பத்தினர் இடையே நிலத் தகறாறு, அதனால் பழிவாங்கல், கொலை என கோவில்பட்டியை கதைக் களமாகக் கொண்டு நகர்கிறது படம்!
கதைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள், அவர்களின் பெயர்கள் என ஒவ்வொன்றும் பக்கா! தனுஷுக்கு அப்பா, மகன் என இரட்டை வேடம். இவர்களில் தனுஷின் சிவசாமி கதாபாத்திரத்தின் மனைவியாக தனது தேர்ந்த நடிப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார் மஞ்சு வாரியார். தமிழுக்கு இவ்வளவு தாமதமாக வந்துட்டீங்களே மேடம்!
பிரகாஷ் ராஜ் பற்றிய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்க, அவரோ அண்ணல் அம்பேத்கரை நினைவுபடுத்தும் விதமாக வழக்கறிஞராக வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுக்கிறார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும், அதில் நடிப்புத் தேனை நிரப்பித் தருகிறவர் பிரகாஷ்ராஜ் என்பதை சொல்லவும் வேண்டுமா?
வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் மிரட்டுகிறார்கள். பாடல்கள் அத்தனையும் படத்திற்கு பெரிய பிளஸ்! கங்கிராட்ஸ் ஜி.வி.பி.!
மிக முக்கியமாக சொல்ல வேண்டியது தனுஷின் நடிப்பு! பிளேபாயாக தமிழ் சினிமாவுக்குள் வந்த தனுஷுக்குள் இப்படி ஒரு நடிப்பு அசுரனா? முற்பாதியில் தந்தை வேடத்திலும், பிற்பாதியில் மகன் வேடத்திலும் பின்னி எடுத்திருக்கிறார். பகை காரணமாக குடும்பத்துடன் காடு, மேடுகளில் அலையும் காட்சிகள் விறுவிறுப்பானவை. பிரசார நொடியே இல்லாமல் வலுவான பாடங்களையும் படத்தில் வைத்திருக்கிறார் வெற்றிமாறன்,
‘பணம், சொத்துன்னு எது இருந்தாலும் பிடுங்கிக்குவாங்க. நம்மிடம் இருந்து பிடுங்க முடியாத சொத்து படிப்புதாண்டா’ என மகனுக்கு தனுஷ் அட்வைஸ் செய்யும் இடம் செம டச்சிங். தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் புரமோஷன் வேலைகளும் படத்தை ரீச் செய்திருக்கிறது. தனுஷின் நடிப்பை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியிருக்கிறான் அசுரன்!