பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து எழுந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் தீபக், ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என்றும், கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தவறான தகவல் காரணமாக தங்களது பாரம்பரிய தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகாரில், நூற்றாண்டுகளாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனால் தங்களது தொழிலுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கேஏஜி டைல்ஸ், விஜய் டிவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி கிராமத்தில் வாரி மண் மூலம் பாரம்பரிய முறையில் டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு நன்மை பயக்கும். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்து முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சகம் ஆகியோருக்கு புகார் அளிக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையின் விசாரணை தொடர்ந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“