தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆடியோ வெளியீட்டு விழாக்கள் வைத்து முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வாக மாற்றி வருகின்றனர். பொதுவாக தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் நடிகர்களை நெருங்குவது பெரும்பாலும் முடியாத விஷயம் என்பதால் இந்த மாதிரியான விழாக்களில் தங்களது அஸ்தான நாயகன் நீண்ட நேரம் பேசுவார் என்பதால், ரசிகர்களும் இந்த மாதிரியான விழாக்களை தவறவிடுவதில்லை.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்த்து. அதேபோல் தனது ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறுவதில்லை. இதில் தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் இணைந்துள்ளார்.
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ஜவான். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியில் தயாராகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. படம் இந்தியில் தயாரானாலும் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸை மும்பையில் நடத்தாத ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார்.
ஏற்கனவே ஜவான் படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சென்னை புறநகரில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் பிரமாண்டமான நிகழ்வு நடைபெறும் என்பதை ஷாருக்கான் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஷாருக்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“வணக்கம் சென்னை, நான் வருகிறேன்!!! சாய் ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அனைத்து ஜவான்களும் வருகிறோம். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தயாராக இருங்கள்... உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! கேட்டால் சில தா தா தையா கூட செய்யலாம். நாளை மதியம் 3 மணி முதல் சந்திப்போம்.'' என பதிவிட்டுள்ளார்.
ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் இயக்குனர் அட்லீ, தான் இயக்கிய தமிழ் படங்களுக்கு உருவாக்கிய ஹைப்பை போல் ஜவான் படத்திற்கும் ஹைப்பை கிரியேட் செய்துள்ளார். மேலும், பொதுவாக ஆடியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கும் நயன்தாரா கூட ஷாருக்கானுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஜவான் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் படத்தின் மற்ற நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முந்தைய கமிட்மென்ட் காரணமாக விஜய் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதன்கிழமை (இன்று) மாலை குறைந்த பார்வையாளர்களுடன் நடைபெறவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“