பாபு
அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் ஏப்ரல் 27 வெளியான போது யுஎஸ்ஸில் சில சாதனைகள் தகர்க்கப்பட்டன. முதல்வார இறுதி வசூலில் ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தின் சாதனையை உடைத்து முதலிடத்தை பிடித்தது. இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை தி ஜங்கிள் புக் படத்திடமிருந்து தட்டிப் பறித்தது. நேற்றுவரை இதன் உலகளாவிய வசூல், 1.28 பில்லியன் டாலர்கள். ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன் டாலர்கள். சுமாராக ஆறாயிரத்து எழுநூறு கோடிகள்.
1.28 மில்லியன் வசூலில் சீன வசூல் இடம்பெறவில்லை. நேற்றுதான் சீனாவில் அவெஞ்சர்ஸ் வெளியானது. வியாழக்கிழமை ப்ரீமியர் காட்சிகள், வெள்ளிக்கிழமை காட்சிகள் சேர்த்து சுமாராக 77.60 மில்லியன் யுஎஸ் டாலர்களை படம் வசூலித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதனை வைத்துப் பார்க்கையில் படம் முதல்வார இறுதியில் 200 மில்லியன் டாலர்களை தாண்டும் என கணித்திருக்கிறார்கள். இது சீனா பாக்ஸ் ஆபிஸ் வார இறுதி வசூலில் ஓர் சாதனை.
கடந்த பிப்ரவரியில் வெளியான மான்ஸ்டர் ஹன்ட் 2 திரைப்படமே வார இறுதி வசூலில் சீனாவில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 185 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்தது. இதுவொரு சீன திரைப்படம். இரண்டாவது இடத்தில் சென்ற வருடம் வெளியான, பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸின் எட்டாவது பாகமான தி ஃபேட் ஆஃப் தி ப்யூரியஸ் உள்ளது. இப்படம் முதல்வார இறுதியில் சீனாவில் 176 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்தது. இவ்விரு படங்களையும் கடந்து அவெஞ்சர்ஸ் வசூலிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. மேலும், வார இறுதியில் 200 மில்லியன் டாலர்களை கடந்து, சீன பாக்ஸ் ஆபிஸில் 200 மில்லியன் டாலர்களை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையையும் படைக்கும் என்கிறார்கள்.
அவெஞ்சர்ஸ் மட்டுமல்ல. பல ஹாலிவுட் படங்களுக்கு சீனாவே ஆக்சிஜன் தருகிறது.
ட்வைனி ஜான்சன் நடித்த ரேம்பேஜ் - யுஎஸ் வசூல் 85 மில்லியன் டாலர்கள் - சீன வசூல் 149.40 மில்லியன் டாலர்கள்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ரெடி ப்ளேயர் ஒன் - யுஎஸ் வசூல் 133.12 மில்லியன் டாலர்கள் - சீன வசூல் 217.50 மில்லியன் டாலர்கள்.
இதேபோல் பல படங்கள் யுஎஸ்ஸில் மிகக்குறைவாகவும், சீனாவில் மிக அதிகமாகவும் வசூலித்து ஹாலிவுட்டை காப்பாற்றி வருகிது. அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் மிகப்பெரிய வசூலை எட்ட சீன பாக்ஸ் ஆபிஸ் பேருதவி செய்யும்.