முத்துக்குமார் அவர்களின் எழுத்து, இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் தொடர் அயலி. அபி நட்சத்திரா, அனுமோல், மதன் ரவிச்சந்திரன், சிங்கம்புலி இவர்களுடன் ஒரு பெரிய பாத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் இத்தொடர் 8 அத்தியாயங்களைக் கொண்டது. தொடரின் கதை புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பண்ணை எனும் ஊரில் 1990ல் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஊரில் எந்தப் பெண்ணும் பத்தாம் வகுப்பைத் தொடாத நிலையில், தான் ஒரு மருத்துவராக வேண்டும் என கனவு காண்கிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி தமிழ்ச்செல்வி (அபி நட்சத்திரா). அவரின் கனவுக்கு அந்த ஊரே தடையாக இருக்கிறது. அதைத் தாண்டி தமிழ்ச்செல்வி பத்தாம் வகுப்பை முடித்தாரா? அவரின் கனவு என்ன ஆனது? என்பது தான் அயலி தொடர்.
அண்மைக் காலங்களில் சிறு தெய்வங்களை மையமாக வைத்து கர்ணன், காந்தாரா போன்ற திரைப்படங்களின் வரிசையில் இத்தொடரும் அயலி எனும் சிறு தெய்வத்தை வைத்து சுழல்கிறது. அந்தத் தெய்வத்தையும் அதன் கோயிலையும் காரணமாக வைத்தே ஊர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும், அக்கட்டுப்பாடுகளை அதே தெய்வத்தையும் கோயிலையும் வைத்தே தகர்ப்பதாக கதை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. முற்பகுதிகளில் 'தெய்வம், கட்டுப்பாடு, பண்பாடு, பழக்கவழக்கம்' என்று பேசும் கதாபாத்திரங்களே பிற்பகுதிகளில் அவற்றையெல்லாம் போட்டு நொறுக்கியிருப்பது நம்மை கைத்தட்ட வைக்கிறது.
முதன்மைக் கதாபாத்திரமான தமிழ்ச்செல்வியோடு சேர்த்து அவளின் தோழிகளாக வரும் இருவர், அவர்களின் தாயார்கள், அவர்களின் பாட்டிகள் என மூன்று தலைமுறையினரின் மூலம், பெண்கள் வாழ்ந்து வரும் ஒடுக்குமுறைச் சூழல்களை பலக் கண்ணோட்டங்களில் விவரித்திருக்கிறார் இயக்குநர். அந்தத் தோழிகள் இருவரின் பாத்திரங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் மனதில் நிற்கும்படி இருக்கின்றன. குறிப்பாக 'நீ வயசுக்கு வரும்போது தான் உன் அப்பாவின் உண்மை முகம் உனக்கு தெரியும்' என்று அந்தத் தோழி சொல்வது மனதில் ஆணியாக இறங்குகிறது.
தலைமையாசிரியரின் கதாபாத்திரம் இதற்கு முன்னரும் பல படங்களில் நாம் பார்த்து பழக்கப்பட்ட 'நல்லாசிரியர்' பாத்திரம் தான் என்றாலும் முழுக்க எதிர்மறையாகவே தொடர் நெடுகிலும் வரும் துணைத் தலைமையாசிரியருக்கு நேரெதிராக அமைந்த பாத்திரமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வசதி, அதிகாரம் ஆகியவை வாய்க்கப் பெற்றவர்கள், மற்றவர்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் துணையாக - 'Ally'யாக இருப்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதற்கு தலைமையாசிரியர் மற்றும் கோயில் அயலிக் கிழவி கதாபாத்திரங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ்ச்செல்வியின் பாத்திர படைப்பும், அபி நட்சத்திராவின் நடிப்பும் தொடரின் இருபெரும் பலங்கள். அனைத்து காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை தேவையான அளவில் வெளிகாட்டி கைத்தட்டல்களை அள்ளுகிறார் அபி. வெறும் இரக்கத்தை மட்டும் கோரும் பாத்திரமாக 'தமிழ்ச்செல்வி' இல்லாமல், 'நல்லப்பெண்' என்று பாராட்டு பெற வேண்டும் என்ற ஆசை இல்லாமல், 'அறிவுக்கு எது சரியோ, அதைச் செய்ய வேண்டும்' என்ற வசனத்திற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறாள் தமிழ்ச்செல்வி. சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக, குறும்பாக, சுட்டியாக, பாவமாக என்று சகலகலா வித்தகியாகத் திகழ்கிறாள் அவள்.
கல்வியை பிரதானமாக வைத்து அதன் பின்புலத்தில் இதரப் பிற சமூகச் சிக்கல்களை பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். ஒருவேளை ஜாதி-மதம்-ஆணாதிக்கத்தின் நேரடி ஆயுதமாக இருக்கும் காதல் திருமணங்களில் நிகழும் ஆணவக் கொலைகளைப் பிரதானச் சிக்கலாக வைத்து கதை அமைத்திருந்தால், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தினாலோ என்னவோ, இயக்குநர் அதைத் தவிர்த்துவிட்டார். இதை நாம் இயக்குநரின் சாமர்த்தியம் எனவும் கொள்ளலாம்.
இன்று பெரும்பாண்மைக் குடும்பங்களில் பெண்களின் கல்வியும் ஒரு கௌரவக் குறியீடாகத்தான் பார்க்கப்படுகிறது. வசதி குறைந்த குடும்பங்களில், பெண்கள் கல்வி முடித்து, வேலைக்குச் சென்று கொண்டு வரும் சம்பளம், குடும்பத்திற்கான வருமானகவும், பிற்காலத்தில் அதே பெண்ணிற்கு நிறைய வரதட்கணைக் கொடுத்து திருமணம் செய்து வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கல்வியை பெண்களுக்கான முன்னேற்றமாக கருதும் குடும்பங்கள் மிகக் குறைவு. கல்வியின் முழுப் பயனைச் சுவைக்கும் பெண்கள் அதைவிடவும் குறைவு.
இந்தத் தொடரின் தொடக்கமே ஒரு காதலுக்கு கிளம்பும் எதிர்ப்புதான். அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டி கட்டமைக்கப்படும் ஊர்க் கட்டுப்பாடுகள் எல்லாமே பிற்காலத்தில் எந்தப் பெண்ணும் தனக்கானத் துணையைத் தானே தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். இன்று நடக்கும் ஆணவக் கொலைகளும் இதன் காரணத்தால்தான். இந்த முக்கியச் சிக்கலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கல்வி என்பதை மட்டும் முன்னிலைப் படுத்தியிருப்பது, இயக்குநரின் பெண் முன்னேற்றம் எனும் நோக்கத்தை முழுமை அடையாமல் செய்துவிடுகிறது.
தொடரில் இடம்பெறும் மற்றனைத்து துணைப்பாத்திரங்களும் மனதில் பதியும்படி வார்க்கப்பட்டிருப்பது நிறைவு தருகிறது. ஊரோடு ஒத்திருக்காமல், எதையும் நையாண்டிச் செய்பவர், வாய் பேச இயலாதபோதும், தைரியமாக அனைவரிடமும் தன் எண்ணங்களைக் கொட்டுபவர், எப்போதும் சண்டையிட்டு கிடக்கும் கிழவிகள் என திணிப்பாக இல்லாமல், அதே நேரம் அழுத்தமாகப் பதியும் வண்ணம் வரும் கதாபாத்திரங்கள் இயக்குநரின் நேர்த்திக்குச் சான்று. பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு ஒன்றி வருவது, தொடருக்கு எங்கும் தடையாக இல்லாமல் செவிகளுக்கு இனிமை சேர்க்கின்றன. இரவு நேர காட்சிகளும், பல குளோஸ் அப் காட்சிகளும் கண்களைத் தாண்டி மனதைத் தீண்டுகின்றன.
நிறைகள் பல கொட்டிக் கிடப்பதாலும் உண்மைகள் பலவற்றை உரக்கப் பேசுவதாலும் அதையும் உறைக்கிற வண்ணம் பேசுவதாலும், 'அயலி' தொடர், நாம் சத்தியமாகவே குடும்பமாக காண வேண்டியதாகிறது.
செய்தி: தோ. டால்டன் ( D. DALLTON) , முனைவர் பட்ட ஆய்வாளர் தொடர்புக்கு: 7598095346
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.