/indian-express-tamil/media/media_files/2025/08/22/rambha-2025-08-22-09-16-47.jpg)
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா, தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில், பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாபன், ரம்பா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
1992-ல் மலையாளத்தில் தனது 15 வயதில் "சர்கம்" படத்தின் மூலம் அறிமுகமான ரம்பா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தார். தமிழில் "உழவன்" படத்தின் மூலம் அறிமுகமான இவர், "உள்ளத்தை அள்ளித்தா", "அருணாச்சலம்", "காதலா காதலா" போன்ற வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். குறிப்பாக, "அழகிய லைலா" பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
கடைசியாக 2010-ல் "பெண் சிங்கம்" படத்தில் நடித்த பிறகு, கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் குடியேறினார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இடையில், "மானாட மயிலாட", "ஜோடி நம்பர் 1" போன்ற சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகக் கலந்துகொண்டார். சமீபத்தில், விஜய் டிவியில் வரவிருக்கும் "ஜோடி ஆர் யூ ரெடி" நிகழ்ச்சியின் புதிய சீசனிலும் அவர் நடுவராகப் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
சினிமா நிகழ்ச்சியில் பேசிய தாணு, ரம்பா மற்றும் அவரது கணவரின் வணிக வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார். "2000 கோடி ரூபாய்க்கு அதிபதி ரம்பா. அவருடைய கணவர் ஒரு பெரிய பிசினஸ்மேன்" என்று கூறிய அவர், ரம்பா மீண்டும் நடிக்க விரும்புகிறார் என்றும், அவருக்காக நல்ல கம்பெனியைப் பார்த்து வாய்ப்பு தேடித் தருவதாகவும் கூறினார். இந்திரகுமார் பத்மநாபன், கனடாவை மையமாகக் கொண்டு பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஹோம் இன்டீரியர் நிறுவனமான மேஜிக் வுட்ஸ் மற்றும் ரம்பாவின் பெயரில் இயங்கும் நிறுவனம் உட்பட மொத்தம் ஐந்து நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராக உள்ளார்.
தாணுவின் இந்த பேச்சு, ரம்பா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தி வந்த ரம்பா, இப்போது மீண்டும் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தனது பயணத்தைத் தொடங்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.