இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த திரைப்படம் என்றால் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலிதான். பிரம்மாண்டமான பட்ஜெட், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம், அசத்தலான கதைக் களம், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என பல அம்சங்களால் பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவின் அடையாளச் சின்னமாக மாறியது. இது வெறும் ஒரு படமல்ல; ஒரு கலாச்சார நிகழ்வு, ஒரு உணர்வுபூர்வமான அனுபவம்.
மகிழ்மதி அரியணைக்கான போராட்டம், குடும்ப உறவுகள், துரோகம், தியாகம், வீரம் என பல அடுக்குகளைக் கொண்ட ஆழமான கதை. அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி என 2 தலைமுறைகளின் வீரமரபை அழகாகப் பதிவு செய்தது. 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்ற கேள்வி பல மாதங்களாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டதை நாம் மறக்க முடியாது. அரண்மனைகள், கோட்டை, நீர்வீழ்ச்சிகள், போர்க்களங்கள் என ஒவ்வொன்றும் பார்வையாளர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றது. கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய தரத்தை நிர்ணயித்தது. இது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்திய படங்களும் பிரம்மாண்டம் காட்ட முடியும் என நிரூபித்தது.
பாகுபலி படத்தின் ஒவ்வொரு காட்சியும் நுட்பமான திட்டமிடலுடனும், உயர்தர தொழில்நுட்பத்துடனும் படமாக்கப்பட்டது. குறிப்பாக போர்க்களக் காட்சிகள், ராணுவ அணிவகுப்புகள், மற்றும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்தன. சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு முழுமையாக கடத்துவதில் முக்கிய பங்காற்றின.
2015-ம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, தமன்னா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி. எம்.எம் கீரவானி இசையில் இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற நிலையில், பாகுபலி படத்தின் 2-ம் பாகம் 2017- ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பாகுபலி திரைப்படம் உலகளவில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் தனித் தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் சேர்த்து ஒரே படமாக "பாகுபலி தி எபிக்" என்ற பெயரில் அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.