1930களில் தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' - அது 'சரோஜா' காலம்!

தமிழ் சினிமாவில் 1930களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களைக் கவர்ந்த பழம்பெரும் நடிகை பேபி சரோஜா மும்பையில் காலமானார்.

தமிழ் சினிமா பிதாமகர் இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா. ஜனவரி 28, 1931ம் ஆண்டு பிறந்த சரோஜா, 1930களில் வெளிவந்த பல சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கினார்.  பால யோகினி (1937), தியாகபூமி (1938), காமதேனு (1939) உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.


குடும்பத்தில் மொத்தம் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவரான பேபி சரோஜாவை, அவரது தாய் அலமேலு விஸ்வநாதன், சரோஜாவின் மாமாவும் பிரபல இயக்குனரிடம் மகளை அறிமுகம் செய்யச் சொன்னார்.

பாலயோகினி படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்தனர். அப்படத்தில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய ‘கண்ணே பாப்பா’ பாடல் பெரும் ஹிட்டடித்தது.

அந்த படம் வெளியான பிறகு, பலரும் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு சரோஜா என பெயர் வைத்ததாக கூறப்படுவதுண்டு. தியாகபூமி படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பரோ’ பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.

நடிப்பது மட்டுமின்றி இசையில் பேபி சரோஜா புகழ்பெற்று விளங்கினார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா என்பது கூடுதல் தகவல். பேபி சரோஜா ஜப்பான் வரை பிரபலமானவர். அந்த காலத்திலேயே பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அங்கு பிரபலமாயிருந்தனவாம். சரோஜாவை ‘செர்லி டெம்பிள் ஆஃப் தமிழ் சினிமா’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.

இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான பேபி சரோஜா, திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். தற்போது 88 வயதில் வயோதிகத்தின் காரணமாக உடல் நலிவுற்ற சரோஜா, நேற்று காலமானார். சரோஜாவின் மரணச் செய்தி கேட்டு திரையுலகப் பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close