/indian-express-tamil/media/media_files/2025/09/01/bad-girl-director-varsha-bharath-speech-at-bad-girl-pressmeet-vetrimaaran-tamil-news-2025-09-01-17-52-48.jpg)
கடந்த ஜனவரி மாதம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிக்கும் படம் பேட் கேர்ள் (BAD GIRL). இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி இருக்கிறார்.
'பேட் கேர்ள்' படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் வர்ஷா பரத் 'கலாசாரம்தான் பெண்களை காப்பாற்ற வேண்டும், பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல. அது பெண்களின் வேலையும் அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த டிரைலரில், படத்தின் நாயகி, தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், என் விருப்பத்தின்படி வாழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஆண் நண்பரை வைத்துக்கொள்வதை ஒரு கவுரவமாக கருதுகிறாள். அதுமட்டுமில்லாமல், அந்த ஆண் நண்பருடன் உடலுறவு வைத்துக்கொள்வது, டேட்டிங் செல்வது என அனைத்தும் பள்ளியில் படிக்கும் போது நடப்பது போல காட்சிகள் அமைந்து இருந்தது.
இதனைப் பார்த்த பலரும் கொந்தளித்தனர். அதுமட்டுமில்லாமல், படத்தின் வரும் நாயகி பிராமணப் பெண்ணாக காட்டி இருந்தது என பலத்தின் டிரைலர் வெளியானதுமே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், 'பேட் கேர்ள்' படத்தின் டிரைலரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் இது போன்ற பதிவு ஏற்றங்களை நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து, தற்போது படம் ரிலீஸ் ஆக தயாராகி இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் வர்ஷா பரத் பேசுகையில், "நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் என சொல்பவர்கள்தான், இப்படத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுடைய வீட்டுப்பெண்களின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்தனர். அதிலிருந்தே அவர்களின் அரசியல் என்ன, மனநிலை என்ன என புரிந்து கொள்ளலாம். நாங்கள் கலாசாரத்தை சீரழிக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்கள். கலாசாரம்தான் பெண்களை காப்பாற்ற வேண்டும், பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல. அது பெண்களின் வேலையும் அல்ல" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.