Advertisment

பிரம்மிப்பூட்டிய 'பாகுபலி 2' படத்தின் விமர்சனம் இதோ!

பாகுபலி மக்கள் நாயகன் என்பது ஏற்கெனவே காட்டப்பட்டுவிட்ட பிறகு மீண்டும் மீண்டும் அது சொல்லப்படுவது தேவையற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரம்மிப்பூட்டிய 'பாகுபலி 2' படத்தின் விமர்சனம் இதோ!

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றமளிப்பது திரையுலகின் விதிகளில் ஒன்று. அந்த விதிக்கு விதிவிலக்காக வந்திருக்கும் படம் பாகுபலி 2.

Advertisment

சாதாரண விதிவிலக்கல்ல. பிரம்மாண்டமான, அட்டகாசமான விதிவிலக்கு. சினிமா ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பு வீண்போகாத அளவுக்கு பாகுபலி 2, முதல் பாகத்தையும் தாண்டி நம்மை அசரவைக்கிறது. கதை, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசனங்கள், இசை, முக்கியமான திருப்புமுனைகள் என எல்லாவற்றிலும் படம் பிரமிக்கவைக்கிறது.

கதையை விலாவரியாகச் சொல்வது படம் பார்ப்பதின் சுவையைக் குறைத்துவிடும் என்பதால் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. ராஜமாதா சிவகாமி ஏன் அனாதை போல ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினார், தேவசேனா ஏன் சங்கிலியால் கட்டப்பட்டார், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பொருத்தமான பதிலை விறுவிறுப்பாகச் சொல்கிறது படம். கட்டப்பாவின் (சத்யராஜ்) நினைவுகூரலில் சொல்லப்படும் பின் கதை பாகுபலிக்கும் குந்தல நாட்டின் யுவராணி தேவசேனாவுக்கும் (அனுஷ்கா) இடையில் ஏற்படும் காதலைச் சொல்கிறது. காதலுக்குக் குறுக்கே வரும் ராஜதந்திரத்தையும் அதனால் மகிழ்மதி சாம்ராஜ்யத்தில் ஏற்படும் குழப்பங்களையும் சொல்கிறது. அடுக்கடுக்காக வரும் நெருக்கடியின் உச்சத்தில் பாகுபலி கொல்லப்பட, மகிழ்மதி பல்லாளத்தேவன் (ராணா டக்குபதி) வசமாகிறது.

ராஜ விசுவாசி கட்டப்பாவின் மூலம் இந்த துரோகக் கதையைத் தெரிந்துகொள்ளும் சிவு என்கிற மகேந்திர பாகுபலி தன் தந்தையின் மரணத்துக்கு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது படம்.

publive-image

பாகுபலி, தேவசேனா காதல் அத்தியாயத்தில் வரும் கண்ணாமூச்சி தேவைக்கு அதிகமாக நீளுகிறதோ என்ற எண்ணம் தோன்றிய மறு நொடியே படம் திசை மாறுகிறது. அப்போது வரும் திருப்பம் முற்றிலும் எதிர்பாராதது. எதையும் நேரடியாகச் செய்யும் வீரனான பாகுபலியைச் சூழ்ச்சிகளும் தந்திரங்களும் எப்படி அலைக்கழிக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அழுத்தமாக உள்ளன. இரண்டாம் பாதியில் மகேந்திர பாகுபலியின் முடிவும் அமரேந்திர பாகுபலியின் எழுச்சியும் உணர்ச்சியும் வேகமும் கொண்ட காட்சிகளால் சொல்லப்படுகின்றன.

ஒரு சில காட்சிகள் அழுத்தமாக மனதில் பதிகின்றன. ராஜமாதாவும் தேவசானாவும் சந்திக்கும் இடம், தேவசேனாவுக்கு எதிரான விசாரணை, பாகுபலி ராஜமாதாவிடம் வாதிடும் இடம், பாகுபலிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு, பாகுபலி மரணமடையும் இடம், கட்டப்பாவின் தர்ம சங்கடம் ஆகியவை சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் தொடக்கக் காட்சிகளில் நகைச்சுவைக்குச் சிறிது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவ்வளவாக எடுபடவில்லை. இதை விட்டுவிட்டால் முதல் பாதி கச்சிதமாக உள்ளது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்துத் திருப்பங்கள் வந்தாலும் படம் சற்றுத் தொய்வடைவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த அளவு அழுத்தமும் வியூகத் திறன்களும் போர்க்காட்சியில் இல்லை. பாகுபலி மக்கள் நாயகன் என்பது ஏற்கெனவே காட்டப்பட்டுவிட்ட பிறகு மீண்டும் மீண்டும் அது சொல்லப்படுவது தேவையற்றது. சில இடங்களில் நடிகர்களுக்கான உதட்டசைவு பொருத்தமில்லாமல் இருப்பது உறுத்துகிறது.

கதையும் திரைக்கதையும் வலுவாக இருந்தாலும் கதையைத் திரையில் சொன்ன விதம் எல்லாவற்றையும் மிஞ்சுமளவுக்கு வலுவாக உள்ளது. அரண்மனைகள், போர்க் காட்சிகள், ஆயுதங்கள், போர் வீரர்களின் அணிவகுப்பு, பட்டம் ஏற்கும் விதம் ஆகியவை மிகவும் நுணுக்கமாகவும் பிரமிப்பூட்டும் விதத்திலும் படமாக்கப்பட்டுள்ளன. கத்தியின் கைப்பிடி முதல், யுத்த வியூகம்வரை ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு உறுதுணையாகத் தொழில்நுட்ப அணியினர் அபாரமாகப் பணிபுரிந்துள்ளார்கள். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தையும் மிடுக்கையும் கூட்டுகிறது.

கலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் அரண்மனைகள், பெரிய யானை வடிவிலான நீரூற்று, ஆயுதங்கள் என அனைத்தும் வியக்கவைக்கின்றன. கமலக்கண்ணன் குழுவினரின் கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு சில இடங்களில் துருத்திக்கொண்டு தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாகப் படத்துக்கு வலு சேர்த்து, படத்தைச் சிறந்த காட்சி அனுபவமாக மாற்ற உதவுகின்றன. பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் படம் ஏற்படுத்தும் தாக்கத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

publive-image

நடிகர்கள் தேர்வுக்காகவே ராஜமவுலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதும் அவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்படுவதும் அரிதானவை. அவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடிப்பது அரிதினும் அரிதானது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகிய அனைவரும் தத்தமது பாத்திரங்களுக்கு மெருகூட்டி வலுப்படுத்துகிறார்கள். உக்கிரமாகச் சண்டையிடவும் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் கிடைத்திருக்கும் வாய்ப்பை சத்யராஜ் நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பாகுபலியைக் கொல்லும் காட்சியிலும் தேவசேனாவின் கோரிக்கையைக் கேட்டு நெகிழும் காட்சியிலும் உருக்குகிறார்.

கிளைமாக்ஸ் சண்டையில் பிரபாஸும் ராணாவும் சரிக்குச் சரியாகப் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். நாயகனுக்குரிய தோரணையை பிரபாஸும் வில்லனின் தோரணையை ராணாவும் குறைவின்றி வெளிப்படுத்துகிறார்கள். ராஜ தோரணையும் மருட்சியும் கலந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் கலக்குகிறார். அழகும் கம்பீரமும் கலந்த வேடத்தில் அனுஷ்கா ஜொலிக்கிறார். நாசரின் வில்லத்தனம் அட்டகாசம்.

கார்க்கியின் வசனங்கள் கூர்மையாகவும் ரசிக்கும் விதத்திலும் உள்ளன. கீரவாணியின் இசையில் பாடல் எதுவும் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை காட்சிகளின் கம்பீரத்தைக் கூட்டுகிறது.

முதல் பாகத்தின் மூலம் திரைப்பட உருவாக்கத்தின் எல்லைகளையும் இந்தியப் படங்களின் வணிகத்தையும் விரிவுபடுத்திய ராஜமவுலி, அவற்றை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். அரசர் காலத்துக் கதைகளைக் கையாள்வது, இரண்டு பாகங்களில் கதை சொல்வது, காட்சிகளின் பிரம்மாண்டம் முதலான பல விஷயங்களில் பாகுபலி இரண்டாம் பாகம் புதிய வரலாறு படைக்கிறது. வலுவான கதையை அழுத்தமான நடிப்பு, தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றுடன் அற்புதமான காட்சி அனுபவமாக மாற்றியமைத்ததற்காக இயக்குநர் ராஜமவுலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment