இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பில் ஒன்றான பாகுபலி 2 சீனாவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தை சீன மொழியில் வெளியிடுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய திரையரங்குகள் முழுவதையும் ஆக்கிரமித்தது பாகுபலி 2 திரைப்படம். பன்மொழிகளில் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் மற்றும் கதாநாயகியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணா, நாசர், சத்யராஜ், தமன்னா, ரானா டக்குபதி எனப் பலர் நடித்தனர். 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில், கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்க பாகுபலி 2 சீனாவில் இன்று வெளியாகிறது. சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் முதல் நாளிலேயே, 1 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி 2 மொத்தம், சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி, அதிக வசூலைக் குவித்த படங்களின் வரிசையில் தங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்தது. சாமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. இதற்கு இயக்குனர் ராஜமௌலிக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.