Advertisment
Presenting Partner
Desktop GIF

Bakasuran Review: சமூகத்திற்கு என்ன சொல்கிறான் பகாசூரன்?

ஒரு பக்கம் அடுத்தடுத்து கொலை செய்யும் பீமராசு, இன்னொரு பக்கம் தனது அண்ணன் மகளின் தற்கொலை குறித்து விசாரிக்கும் அருள்வர்மன் என நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bakasuran

Bakasuran Movie Review

இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ரிச்சா மற்றும் பலர் நடிப்பில் மோகன்ஜி எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பகாசூரன்.

Advertisment

கதைச் சுருக்கம்:

கூத்துக் கலைஞன் பீமராசு(செல்வ ராகவன்)தனது மகளின் இறப்பிற்கு பழிக்குப் பழி வாங்க அடுத்தடுத்து மூன்று கொலைகள் செய்கிறார். மறுபுறம் முன்னாள் ராணுவ மேஜராக வரும் அருள் வர்மனின்(நட்ராஜ்) அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தை அவர் தேடுகிறார்? அதில் ஆன்லைன் பாலியல் தொழில் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது? பீமராசு மகள் இறந்ததற்கு யார் காரணம்? என்ன காரணம்? அருள் வர்மண் தனது அண்ணன் மகளின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? என்பதை விவரிக்கிறது மீதிக் கதை.

ஒரு பக்கம் அடுத்தடுத்து கொலை செய்யும் பீமராசு, இன்னொரு பக்கம் தனது அண்ணன் மகளின் தற்கொலை குறித்து விசாரிக்கும் அருள்வர்மன் என நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி ஆன்லைனில் நடக்கும் பாலியல் குற்றங்களை விவரித்து சுவாரசியமாக நகர்கிறது. இரண்டாம் பாதி, பழி வாங்கும் படலத்தின் பிற்போக்குத்தனமான காரணத்தை தாங்கி பொறுமையை சோதிக்கிறது.

சில இடங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் செல்வராகவன் பல இடங்களில் நடிப்பு என்றால் என்ன எனக் கேட்க வைக்கிறார். முன்னாள் ராணுவ அதிகாரியாக வரும் நட்ராஜ், பீம ராசுவின் மகளாக நடித்திருக்கும் ரிச்சா ஆகியோர் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.

ஆன்லைனில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் என அனைத்து குற்றங்களிலும் பாதிக்கப்படும் பெண்களையே, குற்றவாளிகளை போல் சித்தரித்துள்ளதாக தோன்றுகிறது. குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்களே தவிர, பாதிப்புக்குள்ளாக்கியவர்களை தண்டிப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஆன்லைன் பாலியல் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது? அதை எவ்வாறு தடுக்கலாம் என நகர்த்தப்பட வேண்டிய கதை, குற்றங்கள் நடப்பதற்கு சாதனமாக இருக்கும் டெக்னாலஜியையும், அதனால் பாதிக்கப்படும் பெண்களையும் குற்றவாளியாக்கியுள்ளது.

தற்கொலை செய்த பெண்ணின் தந்தை, வேற எந்த பெண்ணிற்கும் அப்படி நடக்காமல் இருக்க பிரச்சனையை வெளியே சொல்ல முயலும் போது, என் மகளின் மானம் போய்விடும்என தாய் தடுப்பது, மானத்தை வைத்து இன்னும் எத்தனை காலம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை மறைப்பார்கள் என்று தெரியவில்லை. பிரச்சனைகளை எதிர்கொள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அவர்களை பிரச்சனைகளில் சிக்காதவாறு கண்காணிக்க வேண்டும் எனக் கூறுவது அபத்தம்.

மேலும் “சென்னை புதுச்சேரிக்காரங்க எல்லாம் வெளிநாட்டுக்காரங்க மாதிரி வாழ்றாங்கம்மா”, “மேல்படிப்பு உள்ளூரிலேயே படிக்க வச்சிருக்கலாமே” போன்ற வசனங்கள் முழுக்க பழமைவாத குரலாக எதிரொலித்துள்ளது. பெண்ணின் உடலை இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என தெரியவில்லை? பெண்ணின் உடலில் மானம்,  கலாச்சாரம் போன்ற காரணிகளை புகுத்தி அவர்களை அடிமைப்படுத்தி வந்த சமூகம் தற்போது அப்கிரேட் ஆகி ஒழுக்கம் என்ற புதிய சொல்லாடலை கையில் எடுத்துள்ளது. பிரச்சனை என்றால் கொலை அல்லது தற்கொலை என படம் முழுக்க நெகட்டிவ் ஷேட்ஸ்.

தொடர்ந்து கொலை நடந்து கொண்டிருக்க காவல்துறை என்ன செய்கிறது என்ன தெரியவில்லை, வீடியோ ஆதாரத்துடன் சிக்கும் ராதாரவியை, அது மார்ப்பிங் என்ற காரணத்தை ஏற்றுக் கொண்டு விடுவிக்கும் நீதிமன்றம் என லாஜிக் ஓட்டைகள் படத்தில் ஏராளம்.

முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல சாம்சி.எஸ் பின்னணி இசை உதவுகிறது. இரண்டாம் பாதியில் வளவளவென செல்லும் பிளாஷ் பேக், பிற்போக்குத்தனமான வசனங்கள் இரண்டாம் பார்வையாளர்களை தொய்வடைய வைக்கின்றன.

டெக்னாலஜியில் இருக்கும் தீமைகளை அடையாளப்படுத்தாமல், டெக்னாலஜியே தீமை தான் என எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. முரணான வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகளால் நல்ல சஸ்பென்ஸ் திரளாகவரவேண்டிய பகாசூரன் திசை மாறியுள்ளான்.

ரேகசௌந்தர்கருப்பையா

முனைவர் பட்ட ஆய்வாளர்

regasounder92@gmail.com

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment