விளம்பர படம் திரையிட்டதால், 25 நிமிடங்கள் வீண்: பி.வி.ஆர்-க்கு ரூ.1.28 லட்சம் அபராதம்

விளம்பரங்களைக் காட்டி 25 நிமிடங்கள் திரைப்படம் திரையிடுவதை தாமதப்படுத்தியதற்காக பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் பி.வி.ஆர் ஐ.என்.ஓ.எஸ் நிறுவனங்களுக்கு ரூ.1.28 லட்சம் அபராதம் விதித்து பெங்களூருவில் உள்ள நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
PVR Theater

தனது குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ஒருவர், தியேட்டரில் படம் திரையிடப்படும் நேரத்தில் விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் டிரெய்லர்கள் திரையிடப்பட்டதால், தனக்கு நேரம் வீணானதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட திரையரங்கிற்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

Read In English: ‘Time is money’: PVR fined Rs 1.28 lakh for ‘wasting’ 25 minutes with ads

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பவர் 26-ந் தேதி எம்.ஆர்,அபிஷேக் என்பவர் தனது குடும்ப உறுப்பினர் இருவருடன் இணைந்து, பி.வி.ஆர் திரையரங்கிற்கு ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்சாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விக்கி கௌஷல் நடித்த ‘சாம் பகதூர்’ திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். படம் தொடங்கும் நேரம் மாலை 4.5 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 4.5 மணியில் இருந்து 4.30 மணி (25 நிமிடங்கள்) வரை விளம்பரங்களும், படத்தின் டிரெய்லர்களும் திரையிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து விளம்பரங்கள் திரையிடப்பட்டதால், பொறுமை இழந்து கோபமடைந்த அபிஷேக், ஜனவரி 6, 2024 அன்று பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் பி.வி.ஆர் ஐ.என்.ஓ.எஸ் (இப்போது பி.வி.ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது) மீது புகார் அளித்தார். தனது புகாரில், மேலும் படம் முடிந்ததும் வேலைக்குத் திரும்புவது உள்ளிட்ட பிற முக்கிய வேலைகள் இருந்தபோதும், திரையரங்கில் மாலை 4.05 மணிக்கு தொடங்கும் என்ஞறு அறிவிக்கப்பட்ட  படம் மாலை 4.30 மணிக்கு தான் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

மேலும், படம் மாலை 4.05 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு 25 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியதால், தனது நேரம்“வீணடிக்கப்பட்டதாக கூறிய அவர், படம் முடிவடைய மாலை 6.30 ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை பிப்ரவரி 15 அன்று, விசாரித்த பெங்களூருவில் உள்ள நுகர்வோர் மன்றம், விளம்பரங்களைக் காட்டி 25 நிமிடங்கள் திரைப்படம் திரையிடுவதை தாமதப்படுத்தியதற்காக பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் பி.வி.ஆர் ஐ.என்.ஓ.எஸ் நிறுவனங்களுக்கு ரூ.1.28 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

மேலும் திரைப்படங்களுக்கு முன் வணிக விளம்பரங்கள் காண்பிக்கப்படும் நேரத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, திரைப்படங்கள் திரையிட தொடங்கும் உண்மையான நேரத்தை பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் பி.வி.ஆர் ஐ.என்.ஓ.எஸ் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது குறித்து ஆணையத்தின் தலைவர் எம்.ஷோபா, உத்தரவில், “புதிய சகாப்தத்தில், ஒவ்வொருவரின் நேரம் பணமாகக் கருதப்படுகிறது, ஒவ்வொருவரின் நேரமும் மிகவும் விலைமதிப்பற்றது. மற்றவர்களின் நேரம் மற்றும் பணத்திலிருந்து யாருக்கும் பயனடைய உரிமை இல்லை.

25-30 (நிமிடங்கள்) திரையரங்கில் சும்மா உட்கார்ந்து தியேட்டர் ஒளிபரப்புகளைப் பார்ப்பது குறைவானதல்ல. பிஸியாக இருப்பவர்கள் தேவையற்ற விளம்பரங்களைப் பார்ப்பது மிகவும் கடினம். இருப்பினும், குடும்பத்துடன் சிறிது ஓய்வெடுக்க அவர்கள் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேறு எந்த வேலை இல்லை என்று அர்த்தமல்ல என்று கூறியுள்ளது.

இது குறித்து பி.வி.ஆர் தனது பங்கிற்கு, சமூகப் பிரச்சினைகள், சுகாதாரம் மற்றும் அரசாங்கங்களின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கல்வி கற்பிக்கவும் மாநில மற்றும் மத்திய அரசுகளால் வழங்கப்படும் சில பொது சேவை அறிவிப்புகளை குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வடிவில் திரையிடுவதற்கு சட்டத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளதாக கூறியது. அபிஷேக் திரையரங்கில் இருந்த நாளில் அதே விளம்பரங்கள் காட்டப்பட்டதை பி.வி.ஆர் தரப்பில் கூறப்பட்டது.

அதேசமயம் அந்த விளம்பரங்கள், பொது சேவை அறிவிப்புகளுக்குப் பதிலாக வணிக விளம்பரங்கள் காட்டப்படுவதைக் காட்டுகின்றன, இதனால் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக அபிஷேக்கிற்கு ரூ.20,000, புகாரை பதிவு செய்வதற்கான செலவுகளுக்கு ரூ.8,000 மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக ரூ.1 லட்சம் இழப்பீடாக பி.வி.ஆர் மற்றும் பி.வி.ஆர்  ஐ.என்.ஓ.எக்ஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது. ஒரு லட்சம் அபராதத்தை 30 நாட்களுக்குள் நுகர்வோர் நல நிதிக்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: