விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிபிரியன் மீண்டும் விஜய் டிவிக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரோஷினி திரும்பவும் வந்தாச்சு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் டி.வி-யை விட்டு போய்விட முடியுமா என்ன என்று கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் ஆரம்பத்தில் இருந்து ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிபிரியனுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும், ரோஷினி ஹரிபிரியன் நடித்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட கண்ணம்மா கதாபாத்திரத்தில் செட் ஆகிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் பலரும் மீண்டும் பழைய கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் வருவாரா என்று தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்த ரோஷினி ஹரிபிரியன், சினிமாவில் நடிப்பதற்காக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டாலும் இதுவரை அவர் எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், ரோஷினி ஹரிபிரியன் மீண்டும் விஜய் டிவிக்கு வர உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், ரோஷினி திருப்ப வருவது சீரியலுக்கு அல்ல, விஜய் டிவியில் விரைவில் துவங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 3-க்கான புரோமோ அண்மையில் வெளியானது. அதில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், பலரும் எதிர்பார்த்த புகழ் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இருப்பினும், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி ஹரிபிரியன் வருகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரோஷினி மீண்டும் விஜய் டிவிக்கு வருவது பற்றி ரசிகர்கள் ரோஷினி திரும்பவும் வந்தாச்சு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் டி.வி-யை விட்டு போய்விட முடியுமா என்ன என்று கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"