Advertisment

நடிகைகளுக்கு பளார் - ஆணாதிக்கத்தின் பழைய வடிவம்

பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற தொழில் தெரிந்த இயக்குனர்கள் யாரையும் இதுவரை அறைந்ததாகவோ குறைந்தபட்சம் கடிந்து கொண்டதாகவோ தகவல் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thodra movie actress venaa

பாபு

Advertisment

தொட்ரா படவிழாவில் பேசிய அப்படத்தின் இயக்குநர் மதுராஜ், படப்பிடிப்பில் நடிகை வீணாவை அறைந்துவிட்டேன். ஒரு சைக்கோ போல பலமுறை நடந்து கொண்டேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மதுராஜின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மதுராஜ் பேசிய தொனியும், அதனை அவர் வெளிப்படுத்தியதற்கான காரணமும் நுட்பமாக ஆராயப்பட வேண்டியது. அவர் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்காக இதனை கூறவில்லை. படப்பிடிப்பில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு, எந்தளவு என்றால் கோபம் வந்தால் ஹீரோயினையே கன்னத்தில் அறையும் அளவுக்கு என்று தனது தெனாவெட்டை மன்னிப்பு போர்வையில் முன்வைத்தார். இத்தனைக்கும் மதுராஜ் பல படங்கள் இயக்கியவர் அல்ல. தொட்ரா படம்தான் அவரது முதல் படம்.

நடிகைககளின் கன்னத்தில் அறைவதை இயக்குனர்கள் ஒரு பேஷனாகவே வைத்திருக்கிறார்கள். நான் இயக்குனர், நான்தான் எல்லாம் என்பதைத் தாண்டி ஓர் ஆணாதிக்க திமிரையும் இதில் பார்க்கலாம். மிருகம் படப்பிடிப்பில் அப்படத்தின் இயக்குனர் சாமிக்கும், நடிகை பத்மப்ரியாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அது படப்பிடிப்பு தளத்தோடு நின்றிருக்க வேண்டும். ஆனால், சாமி வன்மமாக மனதில் கொண்டு திரிந்தார். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த பிறகு பத்மப்ரியாவை அழைத்து, அனைவர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார்.

சினிமாவில் ஒரு பெண் நடிப்பதற்கு, சராசரி பெண்களைவிட துணிச்சலும், தைரியமும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்ணை அனைவர் முன்னிலையிலும் அறையும் போது அவளது மனம் என்னவிதமாக வேதனைப்படும், அவமானம்கொள்ளும் என்பதை இயக்குனர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. பத்மப்ரியா பிரச்சனையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றார். சாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். ஒரு வருடம் படம் இயக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று சாமி என்ற இயக்குனர் சினிமாவிலேயே இல்லை.

உதவி இயக்குனர்களையும், படம் இயக்க வாய்ப்பு தரும் இயக்குனர்களையும் அடிக்கும் வழக்கம் எஸ்.ஏ.சந்திரேசேகரனுக்கு உண்டு. பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற இதனைச் செய்கிறேன் என்று ஒருமுறை அவர் வியாக்கியானம் அளித்தார். பெற்றோர்களுக்கே தங்கள் குழந்தைகளை அடிக்க அனுமதி இல்லாதபோது, பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து அடிக்க இவர்கள் யார்?

மதுராஜ் போன்ற இயக்குனர்கள் சொல்லும் ஒரு விஷயம், காட்சி நன்றாக வர, ஒழுங்காக நடிக்க, முன்னுக்கு வர அடித்தேன் என்பது. இப்படி சொல்லும் இயக்குனர்களுக்கு அவர்கள் ஏதோ உலக சினிமா எடுப்பதைப் போன்ற மிததப்பு. இவர்கள் படங்களின் அமெச்சூர்த்தனத்தைப் பார்க்கையில் கட்டி வைத்து உதைக்கலாமா என்றே ரசிகர்களுக்கு பெரும்பாலும் தோன்றும்.

பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற தொழில் தெரிந்த இயக்குனர்கள் யாரையும் இதுவரை அறைந்ததாகவோ குறைந்தபட்சம் கடிந்து கொண்டதாகவோ தகவல் இல்லை. அரைகுறைகள்தான் ஸ்பாட்ல நான் டெரரு, அடிப்பேன் உதைப்பேன் என்று உதார்விடுகின்றன. இந்த அரைகுறைகள்தான் வளர்ந்த நடிகர், நடிகைகள் முன் கூனிக்குறுகி இயக்குனர்களின் இயல்பான மதிப்புக்கு உலை வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

நடிகை வீணாவை மதுராஜ் அடித்தது தவறு. இயக்குனர்கள் சங்கமே முன்வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர்கள் புழங்கும் படப்பிடிப்புதளத்தில் சைக்கோக்களுக்கு என்ன வேலை?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment