பாரதி, இந்த பெயருக்கு அறிமுகமே தேவையில்லை. இரண்டு வருடங்களுக்கு முன், யாராவது பாரதி என்று சொன்னால், உடனே மகாகவி பாரதி தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் இன்று பாரதி பெயரை சொன்னாலே, விஜய் டிவியில் நடிக்கும் பாரதி தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு பாரதி@அருண் பிரசாத் தன் நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆணி அடித்தாற்போல பதிந்து விட்டார்.
விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், தமிழக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது. அவ்வளவு ஏன்? ஒரூ குழந்தையை அழைத்துக் கேட்டால் கூட பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்று சொல்லும். அந்தளவுக்கு இந்த சீரியல் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இது 'கிருஷ்ணகோலி' என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், ஸ்வீட்டி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களிடையே பிரபலமானது கொரோனாவுக்கு பின்னர் தான். கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு தொலைக்காட்சி தான் ஒரே பொழுதுபொக்காக இருந்தது.
அந்த சமயம் தான் பாரதி கண்ணம்மா சீரியல், பாரதியின் சந்தேகம், கண்ணம்மாவின் சுயமரியாதை போராட்டம் என பல திருப்பங்களுடன் பயணித்தது. அப்போது தான் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் உயரத்துக்கு சென்றது. என்னதான் சீரியல் முழுவதும் ஒரே நெகட்டிவிட்டி இருந்தாலும், பாரதி மற்றும் கண்ணம்மாவின் நடிப்புக்காகவே பலரும் அந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
அதிலும் இந்த சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்துக்கு இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அதற்காக அவர் பல போராட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. பாரதி எப்படி சின்னத்திரைக்கு வந்தார்? அதற்கு முன்பு பாரதி என்ன செய்து கொண்டிருந்தார்? வாருங்கள்; பார்க்கலாம்!
சேலத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாரதி@அருண் பிரசாத், சேலத்தில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயா பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அருண் பள்ளியில் படிக்கும்போதே பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போதே ஆடியன்ஸை தன் பக்கம் இழுக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். பிறகு சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில், விஷூவல் கம்யூனிகேஷன் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பாரதியின் பெற்றோர், கமலின் தீவிர ரசிகர்கள். கமல் நடிப்பை பார்த்துவிட்டு அருணுக்கும் சிறுவயதிலேயே நடிக்கும் ஆசை வந்துவிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களில் நடித்தார்.
வெங்கடேஷ் இயக்கிய "நிகழ் காலம்" என்ற தமிழ் குறும்படத்தில் அருண் அறிமுகமானார். தொடர்ந்து, ”ஏனோ வானிலை மாறுதே,” “மதிமயங்கினேன்,” “கள்ளன்,” “ஏதோ மாயம் செய்தாய்,” “யானும் தீயவன்,” “பகல் கனவு” உட்பட ஏராளமான குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஏனோ வானிலை மாறுதே குறும்படம் அருணுக்கு சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது.
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு, மேயாத மான் படத்தில் நடிகர் வைபவின் நண்பராக நடித்து அருண் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பிறகு ஜடா படத்தில் ஹீரோ கதிரின் நண்பராக வந்தார். ஆனால் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைப்பது அவருக்கு ஒரு போராட்டமாகவே இருந்தது.
அப்போது தான் அருணுக்கு பாரதி, கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அதுவரை வெள்ளித்திரையில் பல போராட்டங்களை சந்தித்த அருண்’ பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் சிரீயல் உலகில் அறிமுகமானார்.
தனது கருமையான தோல் நிறத்தால் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் கண்ணம்மா என்ற பெண்ணின் கதைதான் இந்த சீரியலின் கரு. இதில் அருண் பிரசாத், கண்ணம்மாவின் கணவர் டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த சீரியல் தொடங்கும் போது டிஆர்பி குறைவாக இருந்தாலும், படிப்படியாக பிரபலமடைந்து தமிழ் தொலைக்காட்சியில் முதல் ஐந்து நாடகங்களில் ஒன்றாக மாறியது.
இந்த சீரியலில் கண்ணம்மாவுடனான காதல், கல்யாணம் என தனது இயல்பான மற்றும் நுட்பமான நடிப்பால் அருண் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். குறிப்பாக ஏராளமான பெண் ரசிகைகள் இவருக்கு உள்ளனர். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இவரின் உண்மையான பெயர் என்ன என்பதுகூட இதுவரை பாதி பேருக்கு தெரியாது. அந்தளவுக்கு பாரதி கதாபாத்திரத்தோடு ஒன்றிபோனார் அருண்.
இதுகுறித்து பாரதி ஒரு பேட்டியில் கூறுகையில்; சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே போய் சேருவதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால், சீரியலில் நடிப்பதால் தினம் தினம் மக்களை பார்க்க முடியும். அதனால் தான், சினிமாவை விட சீரியலில் உடனே ரீச் கிடைக்கிறது என்று அருண் கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில், கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் வெள்ளித்திரையில் நடிப்பதற்காக சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக, இப்போது கண்ணம்மாவாக வினுஷாதேவி நடிக்கிறார்.
தற்போது தமிழ் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் ஆண் நடிகராக அருண் பிரசாத் இருக்கிறார்.
அருண் பள்ளி மாணவனாக இருக்கும் போது ஒரு நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரர். அவர் ஒரு ஃபிட்னெஸ் ஃபிரீக் கூட. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் வொர்க்- அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்வார்.
சமீபத்தில் அருண் சீரியலில் இருந்து பிரேக் எடுத்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு தனது 30வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அவரது புது கெட்-அப் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.
இப்படி வெள்ளித்திரையில் வெற்றிக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக் கொண்டிருந்த பாரதி@அருண் பிரசாத்துக்கு சின்னத்திரை அனைத்தையும் வழங்கி அவரை கெளரவித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அருணுக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. அவருக்கு மட்டுமல்ல. அவரது ரசிகர்களுக்கும் தான். இப்படி ஒரு திறமையான நடிகரை வெள்ளித்திரை எடுத்துக் கொள்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.