bharathiraja | நடிகர் கார்த்தியை பருத்திவீரன் படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர். இந்தப் படப்பிடிப்பின்போது அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.
இது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக எதிராக பலரும் கருத்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிக்கை ஒன்று விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை மட்டுமே.
ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்.
பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் 2 படம் இயக்கி, அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்.
மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்னையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“