இயக்குனர் பாரதிராஜா ஹீரோவாக அறிமுகப்படுத்திய நடிகர் கடந்த 20 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பதை அறிந்து நேரில் சென்று சந்தித்த சம்பவம் பார்ப்பவர்களின் மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது.
சினிமா ஒரு மாயக் கண்ணாடி. அது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தனது அழகான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டும். உள்ளே போனால்தான் தெரியும் அதன் வலி நிறைந்த கொடூரமான மறுபக்கம். சினிமாவில் நடிப்பதால் பேர் புகழ் கிடைக்கலாம். அதற்காக, பலபேர் தங்களுடைய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். மார்க்கெட் இருக்கும் வரைக்கும்தான் ராஜவாழ்க்கை மார்க்கெட் போனால், பரிதாபம்தான். அதனால்தான், சினிமாவுக்கு வரும் பலரும் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்துக்கொண்டு உசாராக செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா பல நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் 1990-ல் இயக்கிய என்னுயிர் தோழன் படத்தில் நடிகர் பாபுவை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் அரசியல் கட்சி தொண்டனால பாபு சிறப்பாக நடித்திருந்தார். என்னுயிர் தோழன் படத்துக்குப் பிறகு, பாபுவுக்கு அடுத்தடுத்து 14 படங்கள் ஒப்பந்தமானது. பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, தாயம்மா உள்ளிட்ட 4 -5 படங்களில் நடித்தார். அதற்கு காரணம், பாபு மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்தபோது சண்டைக் காட்சி படப்பிடிப்பில், ஒரு மாடியில் மேலே இருந்து கீழே குதித்தபோது காயம் அடைந்து அவருக்கு முதுகில் பலமாக அடிபட்டது.
பாபு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தாலும் எழுந்து நடமாட முடியாமல் போனது. இதனால், அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
தான் அறிமுகப்படுத்திய நடிகர் பாபு நடக்க முடியாமல் 20 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கிறார் என்பதை அறிந்து இயக்குனர் பாரதிராஜ நேரில் சென்று சந்தித்து கண்கலங்கியுள்ளார். பாரதிராஜா பார்க்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பாரதிராஜா நேரில் பார்க்கும்போது, கைகளை உயர்த்தும் பாபுவைப் பார்க்கும்போது மனதை உலுக்குவதாக உள்ளது.
தற்போது, நடிகர் பாபுவின் சிகிச்சைக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என்று திரை பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.